விருதுநகர் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் மதுபோதையில் பள்ளிக்கு வந்ததால் ஆசிரியர் கண்டித்ததால், ஆத்திரமடைந்த மாணவர்கள் ஆசிரியரை மதுபாட்டிலால் தாக்கினர். படுகாயமடைந்த ஆசிரியர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்துள்ள திருத்தங்கல்லில் சீ.ரா. அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ. மாணவிகள் பயன்று வருகின்றனர். இப்பள்ளியில் சண்முகசுந்தரம் என்பவர் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேர் மது போதையில் பள்ளிக்கு வந்துள்ளனர். அவர்களை ஆசிரியர் சண்முகசுந்தரம் கண்டித்துள்ளார்.

ஆசிரியரை பாட்டிலால் தாக்கிய மாணவன்

இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள் மறைத்து வைத்திருந்த மது பாட்டிலால் ஆசிரியர் என்று கூட பாராமல் சண்முகசுந்தரத்தை தாக்கியதில் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். படுகாயமடைந்த ஆசிரியர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சீ.ரா. அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மது அருந்திவிட்டு தாக்குதல்

இந்த விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கடந்த ஆண்டு 11ம் வகுப்பு படித்த போது செய்முறை தேர்வு மதிப்பெண்ணை ஆசிரியர் சண்முகசுந்தரம் குறைந்துள்ளார். இதனால் அவர் மீது ஆத்திரத்தில் இருந்து வந்ததால் மது அருந்திவிட்டு தாக்கியதாக தெரிவித்தனர். 

பள்ளி மாணவர்கள் சீர்திருத்த பள்ளியில் அடைப்பு

இதனையடுத்து மாணவர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். பள்ளி மாணவர்கள் ஆசிரியரை பாட்டிலால் தாக்கிய சம்பவம் சக ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.