ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகரும் வழக்கறிஞருமான அரி ராகவன் இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் கடந்த மே 22-ம் தேதி கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்தில்  ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தையடுத்து போலீசார் துப்பாக்கி சூடு, தடியடி நடத்தியதில் 13 பேர் பலியாயினர். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வன்முறைக்கு காரணமாக இருந்ததாக கூறி மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர்  முன்னணி, மே 17 உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். சிலர் கைது நடவடிக்கை இல்லாமல் இருக்க முன்ஜாமீன்  பெற்றனர். இதற்கிடையே  ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகரும், மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளருமான  மதுரையைச் சேர்ந்த வக்கீல் வாஞ்சிநாதன், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் அரி ராகவன் உள்ளிட்டோர் மீது சிப்காட் போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்திருந்தனர். கடந்தவாரம் அவரை சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர். கைது செய்த அவரை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.  இதனையடுத்து அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் அரி ராகவன் இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார்.