சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு மாற்று நாங்கள் தான் என்று பேசிய தவெக தலைவர் விஜய்க்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். திமுகவை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். 

கரூரில் திமுக முப்பெரும் விழா நடந்தது. இந்த விழாவில் திமுக எம்.பி. கனிமொழிக்கு பெரியார் விருதை திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் வழங்கினார். மேலும் தந்தை பெரியார் விருது, மு.க.ஸ்டாலின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் திமுக உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் அதிமுகவையும், பாஜகவையும் கடுமையாக தாக்கி பேசினார்.

விஜய்யை மறைமுகமாக தாக்கிய ஸ்டாலின்

மேலும் திமுகவுக்கு நாங்கள் தான் மாற்று என்று கூறி வரும் தவெக தலைவர் விஜய்யையும் ஸ்டாலின் மறைமுகமாக தாக்கினார். இது தொடர்பாக பேசிய ஸ்டாலின், ''திமுகவுக்கு நாங்கள் தான் மாற்று என இப்போது ஒரு சிலர் பேசி வருகிறார்கள். திமுகவை மாற்றுவோம்; மாற்றம் மாற்றம் என்று சொன்ன எல்லோரும் மறைந்து போனார்கள். ஆனால் திமுக மட்டும் மக்கள் மனதில் இருந்து என்று மறையவில்லை'' என்று நடிகர் விஜய்யை மறைமுகமாக தாக்கினார்.

2026ம் ஆண்டிலும் வெற்றி தொடரும்

தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ''திமுகவை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது. 2019 முதல் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளோம். அதுவும் சாதாரண வெற்றி அல்ல; எதிரியை கலங்கடிக்கும் வெற்றி. இந்த வெற்றி 2026ம் ஆண்டிலும் தொடரும். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும்'' என்று தெரிவித்தார்.