முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியின் விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' திட்டத்தின் முன்னேற்றம் குறித்து விளக்கினார்.
ஜூலை 15 தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் : தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை ஏராளமான திட்டங்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் பலதிட்டங்களை நாம் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். இதையெல்லாம் பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல்தான், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள் புலம்பிக்கொண்டிருக்கிறார். தன்னுடைய உட்கட்சி பிரச்சினையையும், கூட்டணி பிரச்சினையையும் மறைப்பதற்காக இன்றைக்கு அறிக்கை அரசியல் செய்துகொண்டு இருக்கிறார்!
அந்த அறிக்கைகளையாவது ஒழுங்காக - செய்திகளை படித்து - உண்மை நிலவரங்களை தெரிந்து வெளியிடுகிறாரா… என்றால், அதுவும் இல்லை! ஆட்சிக்கு வருவதற்கு முன்னால், “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்று, நான் உங்களையெல்லாம் சந்தித்தபோது பெட்டியில் வாங்கிய மனுக்கள் என்ன ஆனது என்று கேட்டிருக்கிறார்! அரசு சார்பில் பத்திரிகை செய்தி கொடுக்கிறோம். அது உடனே தொலைக்காட்சி செய்திகளில் வருகிறது… சமூக வலைதளங்களில் வருகிறது… மறுநாள் எல்லா செய்தித்தாள்களிலும் வருகிறது… அப்போதும் செய்திகளை பார்க்க மாட்டேன் - படிக்க மாட்டேன் என்று அடம் பிடித்து, இப்படி அரைவேக்காட்டுத்தனமான அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கிறார் நம்முடைய எடப்பாடி பழனிசாமி அவர்கள்.
“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” திட்டம் என்ன ஆனது.?
அவருக்காக இல்லை என்றாலும், மக்களான உங்களுக்கு பதில் சொல்ல வேண்டியது என்னுடைய கடமை… ஏன் என்றால், நான் பணியாற்றுவது உங்களுக்காகத்தான்! அதனால்தான், சுருக்கமாக சொல்கிறேன்… “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” முன்னெடுப்பில் பெறப்பட்ட 4 இலட்சத்து 57 ஆயிரத்து 645 மனுக்களுக்கு தீர்வு காண “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற தனித்துறையை உருவாக்கி நூறு நாட்களில் தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டேன். நூறாவது நாளில் கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில், 32 ஆயிரம் பேருக்கு பட்டா - 30 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் - 10 ஆயிரம் பேருக்கு தொகுப்பு வீடுகள் வழங்கியதோடு, அந்த மனுக்களை மையமாக வைத்து, 544 கோடி ரூபாய் மதிப்பில் 20 ஆயிரம் வளர்ச்சிப் பணிகளை திட்டமிட்டோம்! ஒவ்வொரு மனு மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பதை அவர்கள் கண்காணிக்கிறார்கள். இது எல்லாவற்றையும் செய்திகள் மூலமாக ஆவணப்படுத்தி, மக்களான உங்களிடம் சேர்த்து, வெளிப்படைத்தன்மையோடு செயல்படுகிறோம்! ஆனாலும், இதெல்லாம் எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரியவில்லை மிக முக்கியமான ஒரு அறிவிப்பை நான் வெளியிட விரும்புகிறேன்…
தமிழ்நாடு முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள்
மக்களான உங்களின் குறைகளைத் தீர்க்க உங்கள் பகுதிகளிலேயே ஜூலை 15 தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும். நகரப் பகுதிகளில் 3 ஆயிரத்து 768 முகாம்கள், கிராமப் பகுதிகளில் 6 ஆயிரத்து 232 முகாம்கள் என்று மொத்தம் 10 ஆயிரம் முகாம்கள்! இந்த “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் எல்லாவற்றிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். நகரப் பகுதிகளில் 13 அரசுத் துறைகளின் 43 சேவைகள், திட்டங்கள் உங்களைத் தேடி வரும்! இதுவே, கிராமப் பகுதிகளில் 14 அரசுத் துறைகளின் 46 சேவைகளை நீங்கள் பெறலாம்.
இதில் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால்… கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்ட தகுதியுள்ள பெண்கள் இந்த முகாம்களில் உங்களின் விண்ணப்பங்களை நீங்கள் நிச்சயமாக தரலாம். இப்படி நீங்கள் தரும் விண்ணப்பங்கள் மேல் 45 நாட்களுக்குள் முடிவெடுக்கப்படும்! ஜூலை இரண்டாவது வாரம் தொடங்கி, அக்டோபர் மாதம் வரை இந்த முகாம்கள் நடக்கும். இத்தனை துறைகள், சேவைகள், திட்டங்கள்… இதில் எப்படி விண்ணப்பிப்பது? என்று நீங்கள் யோசிக்க வேண்டாம். உள்ளூர் அளவில் இதற்கான தன்னார்வலர்கள் உங்கள் வீடுதேடி வந்து, உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் பற்றி உங்களுக்கு விளக்குவார்கள். எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? என்ன சான்று, ஆவணங்கள் எல்லாம் இணைக்க வேண்டும்? தகுதி வரம்பு என்ன? இப்படி தேவையான எல்லா தகவல்களும், வழிகாட்டுதல்களும் உங்கள் வீட்டிற்கே வந்து கொடுப்பார்கள். இப்படி, நாளும் பொழுதும் அல்லும் பகலும் மக்களின் குறைகளை தீர்க்கும் நம்மைப் பார்த்தால் எதிர்க்கட்சித் தலைவருக்கு வயிறு எரியதானே செய்யும்!
பல்கலைக்கழகத்திற்கு கலைஞர் பெயர்
இப்படி, இவர் ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் – ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநர்… இதுவரை அவர் செய்ததெல்லாம் உங்களுக்கே தெரியும்… சமீபத்திலான ஒரு உதாரணம் சொல்கிறேன். இந்த தஞ்சை மாவட்டத்தில் ஒரு புதிய பல்கலைக்கழகம் அமைக்க அறிவிப்பு செய்தேன்… அதன்பிறகு நானே தயங்கினாலும், அந்த பல்கலைக் கழகத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயர்தான் வைக்கப்பட வேண்டும் என்று சட்டமன்றத்தில் தி.மு.க. கட்சி மட்டுமல்ல, எல்லா கட்சியும் கட்சி வேறுபாடில்லாமல் எல்லோரும் என்னிடம் வலியுறுத்தினார்கள்.
அதற்குப் பிறகுதான் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட வரைவை அனைவரின் ஒப்புதலோடு ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், தஞ்சை மாவட்ட மாணவர்களின் உயர்கல்விக்கான அந்த சட்டத்திற்கு ஆளுநர் அவர்கள் இப்போதுவரை ஒப்புதல் தரவில்லை. நாம் அனுப்பி வைத்தவுடன் அவர் ஒப்புதல் தந்திருந்தால், இன்றைக்கு இந்த நிகழ்ச்சியிலேயே கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்க அடிக்கல் நாட்டியிருப்பேன்.
கடந்த மே 2 அன்று அனுப்பி வைத்தோம். 40 நாளுக்கு மேல் ஆனது. இன்னும் அனுமதி வரவில்லை! உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகாவது அவர் மாறியிருப்பார் என்று நினைத்தோம்… ஆனால், இன்னும் மாறவில்லை! கலைஞர் பல்கலைக்கழக மசோதா தொடர்பாக பலமுறை நாம் நினைவூட்டினோம். உயர்கல்வித்துறை அமைச்சரையும் “ஆளுநரை சென்று பாருங்கள்” என்று சொல்லியிருந்தேன். ஆனால், உயர்கல்வித் துறை அமைச்சரை சந்திக்க நேரம் தராமல் இழுத்தடிக்கிறார்.
இன்னும் நேரம் தரவில்லை. தெரியும். நேரம் கொடுத்தால் ஏதேனும் கேட்பார்கள் என்று… அதற்கு பயந்துகொண்டு சந்திக்க மறுக்கிறார். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் கேட்கும் ஒரே கேள்வி என்றவென்றால், ஒரு ஆளுநருக்கு இதைவிட வேறு என்ன முக்கியமான வேலை இருக்க முடியும்? இப்படி ஆளுநர் ஒரு பக்கம் என்றால் - ஒன்றிய அரசு மற்றொருபக்கம் நிதி ஒதுக்காமல் உபத்திரவம் செய்கிறார்கள். அதையெல்லாம் சமாளித்து, நாம் எவ்வளவோ திட்டங்களையும், பல சாதனைகளையும் செய்துகொண்டுதான் இருக்கிறோம்.
பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தால் ஆளுநர் பணியனும்
என்னுடைய 50 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் நான் பார்க்காத தடையோ, எதிர்கொள்ளாத நெருக்கடியோ இல்லை! மிசாவையே பார்த்தவன் இந்த ஸ்டாலின்! அரசியலில் எல்லா நெருக்கடிகளையும் – எல்லா எதிரிகளையும் – அவர்களின் சதி திட்டங்களையும் அவர்களோடு எதிர்த்துப் போராடியவன். அதையெல்லாம் முறியடித்துதான் இன்றைக்கு உங்களின் அன்போடு, உங்களுடைய ஆதரவோடு நான் முதலமைச்சராக அமர்ந்திருக்கிறேன். எல்லா வகையான எதிர்ப்புகளையும் தாண்டித்தான் இங்கு உங்கள் முன்னால் நின்றுகொண்டு இருக்கிறேன்.
எதிர்க்கட்சிகளின் அவதூறாக இருந்தாலும், ஒன்றிய அரசின் ஓரவஞ்சனையாக இருந்தாலும், ஆளுநரின் அடாவடியாக இருந்தாலும், அனைத்தையும் தாண்டி நினைத்ததை செய்து முடிக்கும் துணிவும் – கொள்கை உறுதியும் - மக்களான உங்கள் ஆதரவும் எனக்கு இருக்கிறது! அந்த ஆதரவை எப்போதும் நீங்கள் தர வேண்டும் தர வேண்டும். இன்றைக்கு கும்பகோணத்தில் நம்முடைய கலைஞர் அவர்களின் பெயரால் அமையவிருக்கும் பல்கலைகழகத்திற்கு இதுவரை ஆளுநர் அனுமதி தரவில்லை. பொறுத்திருப்போம். பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தால் அதற்கு பிறகு ஆளுநருக்கு பணியவேண்டிய ஒரு கட்டாயத்தை ஏற்படுத்துவோம் என்பதையும் இந்த நேரத்தில் உறுதியாக எடுத்துச்சொல்லிக்கொள்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.