ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு.. மாணவர் சமுதாயம் எதை நோக்கிப் பயணிக்கிறது? கவலையில் ராமதாஸ்!
இந்தியாவின் எதிர்காலத் தூண்கள் என்று நம்பப்படும் மாணவர் சமுதாயம் எதை நோக்கிப் பயணிக்கிறது? அவர்களின் எதிர்காலமும், தமிழகத்தின் எதிர்காலமும் என்னவாகும்? என்பன உள்ளிட்ட வினாக்கள் மனதை வாட்டிக் கொண்டிருக்கின்றன.
திருவரங்கம் பள்ளியில் மோதலைத்தடுக்க முயன்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: திருச்சி மாவட்டம் திருவரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரு தரப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்ற சிவக்குமார் என்ற ஆசிரியரின் தலையில் ஒரு மாணவர் அரிவாளால் வெட்டியதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த மோதலில் இன்னொரு மாணவரும் காயமடைந்திருக்கிறார். இந்தியாவின் எதிர்காலத் தூண்கள் என்று நம்பப்படும் மாணவர் சமுதாயம் எதை நோக்கிப் பயணிக்கிறது? அவர்களின் எதிர்காலமும், தமிழகத்தின் எதிர்காலமும் என்னவாகும்? என்பன உள்ளிட்ட வினாக்கள் மனதை வாட்டிக் கொண்டிருக்கின்றன.
இதையும் படிங்க: School Colleges Holiday: ஆகஸ்ட் 3ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான சூப்பர் அறிவிப்பு!
அன்னையும், தந்தையும் நன்னெறி தெய்வம் என்றால், அந்த நன்னெறியை கற்றுத் தரும் தெய்வங்கள் ஆசிரியர்கள் தான். கடவுளுக்கு மேல் வைத்து கொண்டாடப்பட வேண்டியவர்கள் அவர்கள். ஆனால், அண்மைக்காலமாக ஆசிரியர்கள் மாணவர்களால் தாக்கப்படும் நிகழ்வுகளும், ஆசிரியைகள் மாணவர்களால் அவமதிக்கப்படும் நிகழ்வுகளும் அதிகரித்து விட்டன. அனைவருக்கும் கவலையளிக்கும் இந்த சிக்கலுக்கு தீர்வு காணப்பட வேண்டியது உடனடித் தேவையாகும்.
தெருவுக்குத் தெரு மதுக்கடைகளை திறந்து வைத்து விட்டு, கைக்கெட்டும் தொலைவில் கஞ்சா கிடைப்பதை அனுமதித்து விட்டு மாணவர்களை மட்டும் இத்தகைய சீர்கேடுகளுக்கு பொறுப்பாக்குவது சரியானது அல்ல. பேனாக்களை எடுத்துச் செல்ல வேண்டிய வயதில் பள்ளிகளுக்கு மாணவர்கள் அரிவாளுடன் செல்வது ஏன்? வணக்கங்கள் நிறைந்திருக்க வேண்டிய மனதில் வன்முறை எண்ணங்கள் பெருகியிருப்பதற்கு காரணம் என்ன? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு விடை காண வேண்டும். அந்த அடிப்படையில் பள்ளி வளாகங்களை பாதுகாப்பானதாகவும், ஆசிரியர்கள் மதிக்கப்படும் இடமாகவும் மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.