கள்ளக்குறிச்சியில் ‘சாதி’ சண்டை வெடிக்கும்..ஸ்ரீமதி மரண சர்ச்சை - உளவுத்துறை பகீர் தகவல் !
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டார்.
மரணம் தொடர்பாக நீதி கேட்டு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போராட்டத்தில் கலவரம் வெடித்தது. பள்ளி வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டதுடன், அங்கிருந்து பொருட்கள் சூறையாடப்பட்டன. மாணவியின் இறப்பு , கலவரம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. அத்துடன் இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் உள்ளது. கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்டவர்களின் விவரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.
அத்துடன் கலவரம் நடந்த அன்று யாருடைய ட்விட்டர் கணக்குகளில் இருந்து எல்லாம் வதந்தி பரப்பப்பட்டது என்று போலீசார் கண்டறிந்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. மற்றும் சிறப்பு புலானய்வு பிரிவினர் வழக்குப்பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் செய்திகளுக்கு..அதிமுகவில் அந்த 4 பேர்.. எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் கொடுத்த அதிர்ச்சி !
5 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக்கோரி நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதனை தொடர்ந்து இன்று மதியம் 12.30 மணி முதல் நாளை மதியம் 12.30 மணி வரை 5 பேருக்கும் சிபிசிஐடி காவல் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசிக தலைவர் வெளியிட ட்வீட் பரபரப்பை கிளப்பியது. திருமாவளவன் வெளியிட்ட பதிவில், 'மாணவி ஸ்ரீமதி கொல்லப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்பதிலிருந்து திசை திருப்பி பள்ளியைத் தாக்கியது யார்? கொளுத்தியது யார்? என்று விவாதத்தை மடைமாற்றிவிட்டு மாணவியின் குடும்பத்திற்கு எதிராகச் சிலர் திட்டமிட்டே செயல்பட்டு வருகின்றனர். அந்தச் சதிக்கும்பலுக்குத் துணைபோகும் வகையில் தற்போது உளவுத்துறையின் நடவடிக்கைகளும் அமைவதாக உள்ளது.
கீழுள்ள ஆங்கில நாளேட்டுச் செய்தி உள்நோக்கத்துடன் கூடியதாக உள்ளது. உளவுத் துறையிலுள்ள சாதிய வாதிகளின் சதியாகவே தெரிகிறது. இம்மாதிரியான தகவலை ஊடகத்திற்கு அளித்த உளவுத்துறையினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுக்கு அளித்த இரகசிய தகவல்களை ஊடகத்தில் கசியவிடுவது ஏன்? இத்தகவலே தவறானது. இது ஆதிதிராவிடர் மற்றும் விசிகவுக்கு எதிரான அரசியல் சதியாகும். பள்ளியைக் கொளுத்தியதும் ஆதி திராவிடருக்கெதிராக சாதிய வன்மத்தைக் கக்குவதும் ஸ்ரீமதியின் சாவுக்குக் காரணமானவர்களே என்பதை அறியமுடிகிறது' என்று கூறி பரபரப்பை கிளப்பினார்.
மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 5ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !
இந்த நிலையில் தற்போது வெளியாகிய தகவல் ஒன்று மீண்டும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. தனியார் சேனலுக்கு பேட்டியளித்த காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர், 'கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாதி ரீதியான மோதல்கள் நடந்துள்ளன. உளவுத்துறையின் சிக்னலை காவல்துறை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு முன்பு இதுபோன்ற மோதல்களில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்' என்று கூறினார்.
சக்தி மேல்நிலைப்பள்ளி கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவருடையது என்றும், இறந்துபோன பெண் அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. அமைதி வழியில் இருந்த போராட்டம், வேண்டுமென்றே சிலரின் தூண்டுதலால் கலவரமாகியது என்றும் கூறப்படுகிறது. அவர்களின் பின்னால் விடுதலை சிறுத்தை கட்சியினர் இருக்கிறார்கள் என்றும், அவர்களே இந்த கலவரத்துக்கு என்றும் மேலிடத்துக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இதனால் தற்போது அப்பகுதியில் சாதி கலவரம் ஏற்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. உளவுத்துறையில் இருந்து மாவட்ட காவல்துறைக்கு அலெர்ட் செய்தி அனுப்பப்பட்டுள்ளதால், மாவட்டம் முழுவதும் காவல்துறை உஷார் படுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..அந்தரங்க உறுப்பில் காயம்..போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பொய் ? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் !