தமிழ்நாட்டில் 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளதாகவும், 2 ரயில்கள் பகுதி வாரியாக ரத்து செய்யப்பட உள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

5 Tamil Nadu Express Trains Be Diverted: தமிழ்நாட்டில் 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பு: மதுரை கோட்டத்தில் நடைபெறும் பொறியியல் பணிகளை எளிதாக்கும் வகையில் நிலைத்த நேர வழிநடத்தும் தடையமைப்பு (Fixed Time Corridor Block) நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, கீழ்க்கண்ட ரெயில்வே பயண திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

செங்கோட்டை-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில்

ஜூன் 13, 14, 16, 17, 18, 20, 21, 23, 24, 25, 27, 28, 30 ஆகிய தேதிகளில் செங்கோட்டை-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16848) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சிராப்பள்ளி வழியாக இயக்கப்படும். கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி மற்றும் மணப்பாறை ஆகிய நிலையங்களில் இந்த ரயில் நிற்காது. அதே வேளையில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை மற்றும் காரைக்குடி ஆகிய நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும்.

கன்னியாகுமரி-சார்லபள்ளி சிறப்பு ரயில்

ஜூன் 20 மற்றும் 27ம் தேதிகளில் காலை 05.15 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் கன்னியாகுமரி-சார்லபள்ளி சிறப்பு ரயில் (வ.எண்:07229) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக இயக்கப்படும். மதுரை, கொடைக்கானல் ரோடு மற்றும் திண்டுக்கல் ஆகிய இடங்களில் இந்த ரயில் நிற்காது. கூடுதலாக மானாமதுரை மற்றும் காரைக்குடியில் நின்று செல்லும்.

கன்னியாகுமரி-ஹவுரா எக்ஸ்பிரஸ்

ஜூன் 14, 21 மற்றும் 28ம் தேதிகளில் காலை 05.50 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் ஹவுரா எக்ஸ்பிரஸ் (வ.எண்: 12666) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக இயக்கப்படும். இந்த ரயில்மதுரை மற்றும் திண்டுக்கலில் நிற்காது. மானாமதுரை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டையில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை-செங்கோட்டை எக்ஸ்பிரஸ்

ஜூன் 15, 18, 22, 25 மற்றும் 29ம் தேதிகளில் பிற்பகல் 12.10 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்படும் செங்கோட்டை எக்ஸ்பிரஸ் (வ.எண்: 16847) திருச்சி, காரைக்குடி, மானாமதுரை மற்றும் விருதுநகர் வழியாக இயக்கப்படும். மணப்பாறை, வையம்பட்டி, வடமதுரை, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் மற்றும் கள்ளிகுடியில் நிற்காது.புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை மற்றும் அருப்புக்கோட்டையில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்படும்.

நெல்லை எக்ஸ்பிரஸ்

மாதா வைஷ்ணவ தேவி கட்ரா-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் (வ.எண்: 16788) ஜூன் 19 மற்றும் 26ம் தேதிகளில் திருச்சி, காரைக்குடி, மானாமதுரை மற்றும் விருதுநகர் வழியாக இயக்கப்படும். திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு மற்றும் மதுரையில் இந்த ரயில் நிற்காது. புதுக்கோட்டை, காரைக்குடி மற்றும் மானாமதுரையில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்படும்.

பகுதி வாரியாக ரத்து செய்யப்படும் ரயில்கள்

மேலும் ஜூன் 15ம் தேதி முதல் 30ம் தேதி வரை கோயம்புத்தூரில் இருந்து காலை 08.00 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (வ.எண்: 16322) திண்டுக்கல் முதல் நாகர்கோவில் வரை ரத்து செய்யப்படும். இந்த ரயில் திண்டுக்கலில் நிறுத்தப்படும். 

இதேபோல் மதுரை காச்சிக்குடா சிறப்பு ரயில் (வ.எண்: 07192) ஜூன் 18 மற்றும் 25ம் தேதிகளில் மதுரையில் காலை 10.40 மணிக்கு பதிலாக 1 மணி 20 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 12.00 மணிக்கு புறப்படும்.