அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறு கருத்து: ஆன்மீக பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியனுக்கு நிபந்தனை ஜாமீன்
விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

செப்டம்பர் 11-ம் தேதி சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியன், அண்ணல் அம்பேத்கர், திருவள்ளுவர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் குறித்து இழிவாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் இரா. செல்வம் புகார் அளித்தார்.
மணியன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் செப்டம்பர் 14ஆம் தேதி அதிகாலையில் மணியன் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே அவர் மன்னிப்பு கேட்டு மனு தாக்கல் செய்து ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.
பாஜக மூத்த தலைவரான ஹெச் ரஜா ஆர்பிவிஎஸ் மணியன் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவீட்டில், "உள் அரங்கு கூட்டத்தில் பேசியதாக 77 வயது முதியவர் சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு உள்ளவர் என்று பாராமால் 14 ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு ஆன்மீக பேச்சாளர் RBVS மணியன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்தி பேசிய இழிபிறவி மீது நடவடிக்கை என்ன?" என கேள்வி எழுப்பி இருந்தார். இந்த நிலையில் ஆர்பிவிஎஸ் மணியனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். விசாரணை அதிகாரி முன் தினமும் ஆஜராக வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D