தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக தொடர் தாக்குதல் - எல்.முருகன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக தொடர் தாக்குதல் நடைபெற்று வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்

Serial attacks against Scheduled Caste people in Tamil Nadu alleges l murugan smp

மதுரை பெருங்குடியில் ஆறு வயது சிறுவன் உள்பட பட்டியலின சமூகத்தை சேர்ந்த 5 பேர் மீது சாதிய கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தாக்குதல் நடத்திய இருவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக தொடர் தாக்குதல் நடைபெற்று வருவதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், மத்திய இணையமைச்சருமான எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், குற்றம் இழைத்தோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதி பெருங்குடியில், பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த 5 பேர் மீது  ஒரு கும்பல் ஆயுதத்தால் வெட்டி கொடூர தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 4 பேர் பெரியவர்கள் ஒருவர் 6 வயது சிறுவன் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தொடர்ச்சியாக பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறை நாள்தோறும் நடந்த வண்ணம் உள்ளது. திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் வீடு புகுந்து பட்டியலினத்தைச் சேர்ந்த பள்ளி மாணவரும், அவரது தங்கையும் வெட்டப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த பகுதியில் ஜாதி வன்மமும், ஆயுத கலாச்சாரமும் மாணவர்களிடம் தலை தூக்குவதை தடுக்க தமிழக அரசு இதுவரை  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

அதே நாங்குநேரியில்  நீதிமன்றம் அருகே கடை ஒன்றின் மீது அண்மையில் நாட்டு வெடிக்குண்டு வீசி தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாணவர்  ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவங்களில் உண்மை குற்றவாளிகள் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. காவல்துறை பெயரளவுக்கு வழக்கு பதிவு செய்துவிட்டு கண்டும்காணாமலும் இருக்கிறது.

நாங்குநேரி சம்பவங்களின் பின்னணியிலும், குற்றத்தில் ஈடுபட்ட சிலருக்கு ஆதரவாகவும் உள்ளூர் திமுக நிர்வாகிகள் சிலர்  இருப்பதால் தமிழக அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க தயங்குகிறது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் பெட்ரோல் வெடிகுண்டு தயாரித்து, அதனை வெடிக்க வைத்து வீடியோ வெளியிட்ட சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.  திருநெல்வேலி அருகே மணிமூர்த்திஸ்வரம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் குளித்துக் கொண்டு இருந்தபோது அங்கு வந்த 6 பேர் கொண்ட  கும்பல் அவர்களைக் கொடூரமாக தாக்கிய சம்பவம் நடந்தது. அவர்களிடம் இருந்த செல்போன் உள்ளிட்டவற்றையும் அந்த கும்பல்  கொள்ளையடித்துச் சென்றது.  

தென் மாவட்டங்களில் ஜாதி வன்மமும், ஆயுத கலாச்சாரமும் மாணவர்களிடம் தலை தூக்குவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நான் உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பல முறை கோரிக்கை  வைத்தோம். ஆனால் சொந்த கட்சியினரின் தலையீடு இருப்பதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதுவும் நடக்காதது போல வேடிக்கை பார்க்கிறார்.  

விமானத்தில் செல்போனை ஏன் ஏரோபிளேன் மோடில் வைக்க சொல்கிறார்கள்?

இதுபோன்ற குற்றசம்பவங்களில் குற்றவாளிகளை கண்டறியவும்,  ஆயுத கலாச்சசாரத்தை ஒழித்து கட்டவும், தமிழக காவல்துறையும், அந்த துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக அரசின் இந்த செயல், சமூகங்களுக்கிடையே விரோதத்தை மறைமுகமாக ஊக்குவித்து வருகிறது. இதனால் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த சாதாரண பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். 

தமிழகத்தில் ஜாதிய மோதல்களை   தடுக்காமல் தொடர்ந்து தமிழக அரசு   வேடிக்கை பார்த்து வருவதால் மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. அண்மையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பட்டியலின சமூகத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டு, அவர்கள் வாயில் சிறுநீர் கழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது மதுரை மாவட்டத்திலும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 5 பேர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜாதிய மோதல்கள் மீண்டும் மீண்டும் நடப்பது தமிழக மக்களை பெரும் கவலையடைச் செய்துள்ளது.  இந்த குற்றவாளிகளை கண்டறியவும்,  தமிழகத்தில்  ஆயுத கலாச்சசாரத்தை ஒழித்து கட்டவும், தமிழக காவல்துறையும், அந்த துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். நடந்த சம்பவங்களில் உண்மை குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு அவர்கள் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios