கரூர் கூட்ட நெரிசலில் கத்திகுத்து சம்பவம் நிகழ்ந்ததாக வதந்தி பரவிய நிலையில், அது குறித்து செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். கூட்டத்துக்குள் யாரோ ஒருவர் இன்னொருவரை கத்தியால் குத்திவிட்டார் என சமூகவலைதளத்தில் சிலர் தெரிவித்து வருகின்றனர்.
கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரத்தில் ஏற்படட் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தில் திமுக அரசு மீதும், முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி மீதும் தவெகவினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். பெரும் கூட்டத்துக்குள் ஆம்புலன்ஸ்களை அனுப்பியது ஏன்? கூட்டத்தில் காவல் துறையினர் தடியடி நடத்தியது ஏன்?
தவெகவினர் அடுக்கடுக்கான கேள்வி
விஜய் பேசும்போது அவரது வாகனத்தில் செருப்புகள் வீசிய மர்ம நபர்கள் யார்? சம்பவம் நடந்தவுடன் அவசரம் அவசரமாக பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தது ஏன்? என பல்வேறு கேள்விகளை தவெகவினர் எழுப்பினார்கள். மிக முக்கியமாக கூட்டத்தில் மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தியதாகவும் தவெகவினர் குற்றம்சாட்டுகின்றனர். இது தொடர்பாக தவெவினர் சேனல்களுக்கு பேட்டியும் அளித்தனர்.
செந்தில் பாலாஜி விளக்கம்
இந்நிலையில், கரூர் சம்பவம் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, விஜய் காலதாமதமாக வந்ததும், அவர் வாகனத்துடன் அதிக கூட்டம் வந்ததுமே நெரிசலுக்கு காரணம். தவெகவினர் மக்களுக்கு தொண்டர்களுக்கு தண்ணீர் கூட கொடுக்கவில்லை என்றார். மேலும் செருப்புகள் வீசப்பட்டது, மின் தடை ஏற்பட்டது ஆகியவற்றுக்கும் விளக்கம் அளித்தார்.
கத்தியால் குத்திய மர்ம நபர்கள்
இதேபோல் கூட்டத்தில் மர்ம நபர் கத்தியால் குத்தியதாக வதந்தி பரப்பியதற்கும் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களியம் பேசிய அவர், ''எந்த நேரத்தில் என்ன நடந்ததென்றே தெரியாமல் வதந்தி பரப்புகின்றனர். செய்யும் தவறுகளை ஒப்புக்கொள்ளாமல், அதை சரிசெய்யவும் முயற்சி எடுக்காமல் அரசு மீது வேண்டுமென்ற பழி போடுகின்றனர்.
எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்?
கூட்டத்துக்குள் யாரோ ஒருவர் இன்னொருவரை கத்தியால் குத்திவிட்டார் என சமூகவலைதளத்தில் சிலர் தெரிவித்து வருகின்றனர். அது உண்மையெனில், அந்த நபருக்கு எந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது? என்ற அடிப்படை தகவலையாவது சொல்ல சொல்லுங்கள்'' என்று கூறியுள்ளார்.
