மேற்கு மண்டல திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரைத் துதிபாடும் போக்கு அதிகரித்துள்ளது. செந்தில் பாலாஜியின் பிறந்தநாள் போஸ்டர் சர்ச்சை, கொங்கு மண்டல திமுகவில் மூத்த நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய 6 மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தில் உள்ள 39 சட்டமன்றத் தொகுதிகளின் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை திமுக தலைமை நியமித்துள்ளது.

இந்த முடிவைத் தொடர்ந்து, மேற்கு மண்டலத்தில் உள்ள திமுக நிர்வாகிகள் மத்தியில் செந்தில் பாலாஜியைத் துதிபாடும் போக்கு அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.

செந்தில் பாலாஜி பிறந்தநாள் கொண்டாட்டம்

பொறுப்பாளர் நியமனத்தைத் தொடர்ந்து, இந்த 6 மாவட்டங்களிலும் செந்தில் பாலாஜி சொல்வதே வேட்பாளர் தேர்வில் முக்கியப் பங்கு வகிக்கும் என்ற நம்பிக்கை தொண்டர்களிடையே நிலவுகிறது. இதனால், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அனைவரும் செந்தில் பாலாஜியின் விசுவாசிகளாகத் தங்களைக் காட்டிக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் உச்சமாக, சமீபத்தில் செந்தில் பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு, நிர்வாகிகள் போட்டி போட்டுக்கொண்டு போஸ்டர்கள், சமூக வலைதளங்கள், ரீல்ஸ் மூலமாகவும், நலத்திட்ட உதவிகள் வழங்குவதன் மூலமாகவும் பிரம்மாண்டமாகக் கொண்டாடினர்.

மூத்த நிர்வாகியின் ஆதங்கம்

கொங்கு மண்டல திமுகவில் செந்தில் பாலாஜியின் செல்வாக்கு அதிகரித்து வருவது மூத்த திமுக நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக, ஈரோடு மாவட்ட திமுகவின் முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான என்.கே.கே.பி. ராஜா பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி பிறந்தநாளை ஒட்டி, ஈரோடு மாவட்டச் செயலாளர் எம்.சிவபாலன் வடிவமைத்த வாழ்த்துச் செய்தியில், ஸ்டாலின், உதயநிதி படங்கள் சிறிதாகவும் செந்தில் பாலாஜியின் நான்கு படங்கள் பெரியதாகவும் இடம்பெற்றிருந்தன. இதேபோல், திமுக தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த எம்.ஜூனாயத் என்பவரது வாழ்த்துச் செய்தியில் திமுக தலைவர்களின் படங்களே இடம்பெறவில்லை.

இந்த இரு போஸ்டர்களையும் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்த என்.கே.கே.பி. ராஜா, "ஏண்டா மானங்கெட்டு திரிகிறீர்கள்... ஜெயிக்கச் சொல்லுங்கடா பார்க்கலாம்... இதுக்கு கூட ரோசம் வர்லேன்னா, அப்புறம் எதுக்குடா கருப்பு, சிவப்பு கொடி கட்டுறீங்க... மனுஷனா, திமுககாரனா இருக்கணும்னு யோசிங்க. ரொம்ப அசிங்கமா போகுது" என்று காட்டமாக வாய்ஸ் மெசேஜ் வெளியிட்டார்.

"கழகத்தின் கம்பீரத்தை சிதைக்காதீர்கள்":

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய என்.கே.கே.பி. ராஜா, "எங்கள் குடும்பம் பாரம்பரிய திமுக குடும்பம். திமுகவின் எந்த நிகழ்விலும் பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர், தளபதி படங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும். ஆனால், தற்போது செந்தில் பாலாஜியைத் துதிபாடி போஸ்டர் போட்டால் கட்சிப் பதவிகளும், எம்.எல்.ஏ. பதவியும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை திட்டமிட்டு விதைக்கப்பட்டுள்ளது.

சிறை சென்று, ஆளுங்கட்சியின் அடக்குமுறையை எதிர்கொண்டு கம்பீரமாக வளர்ந்தவர்கள் திமுகவினர். அந்தக் கம்பீரத்தைச் சிதைக்கும் வேலையைச் சம்பந்தப்பட்டவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். இது எனது ஆதங்கம் மட்டுமல்ல, கொங்கு மண்டலத்தில் உள்ள மூத்த திமுக நிர்வாகிகள், தொண்டர்களின் ஆதங்கம்" என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.