- Home
- Tamil Nadu News
- தேர்தல் வேலைகளை ஆரம்பித்த செந்தில் பாலாஜி...! கரூரில் குவியும் பரிசு பொருட்கள்.. அடித்தது ஜாக்பாட்
தேர்தல் வேலைகளை ஆரம்பித்த செந்தில் பாலாஜி...! கரூரில் குவியும் பரிசு பொருட்கள்.. அடித்தது ஜாக்பாட்
திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி கரூர் மக்களுக்கு தீபாவளி பரிசு பொருட்களை அள்ளிக்கொடுத்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலுக்கான வேலைகளை இப்போதே தொடங்கி மக்கள் மத்தியில் ஸ்கோர் செய்ய ஆரம்பித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல்
கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக பலியாயினர். விஜய் தாமதமாக வந்ததே விபத்துக்கு காரணம் என திமுகவினரும், தமிழக அரசும் கூறி வருகிறது. அதே வேளையில் கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ.வின் சதித்திட்டம் தான் காரணம் என தவெகவினர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
தீபாவளி பரிசு வழங்கிய செந்தில் பாலாஜி
கரூர் சம்பவம் நடந்த உடன் செந்தில் பாலாஜி மருத்துவமனைக்கு விரைந்து வந்தது எப்படி? அவருக்கு இப்படி ஏற்பட போகிறது என முன்கூட்டியே தெரியுமா? என தவெகவினர் கேள்விகளை எழுப்பினார்கள். இந்த கேள்விகளுக்கு எல்லாம் விரிவான பதில் அளித்த செந்தில் பாலாஜி சட்டப்பேரவை தேர்தல் பணிகளை இப்போதே ஆரம்பித்து விட்டார். நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், கரூர் தொகுதி முழுவதும் திமுக சார்பில் தீபாவளி பரிசு வழங்கியுள்ளார் செந்தில் பாலாஜி.
பரிசு தொகுப்பில் என்னென்ன உள்ளன?
செந்தில் பாலாஜியின் பெயர் பொறித்த தீபாவளி பரிசு தொகுப்பு பையில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி படங்களுடன் செந்தில் பாலாஜி படங்களும் அச்சிடப்பட்டுள்ளன. இந்த பரிசு தொகுப்பில் ஸ்வீட் பாக்ஸ், பட்டாசு பாக்ஸ், எவர்சில்வர் பாத்திரம் ஆகியவை உள்ளது. இந்த பரிசு தொகுப்பை செந்தில் பாலாஜி ஒவ்வொரு வீடாக நேரடியாக சென்று கொடுத்தது தான் இதில் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
கரூர் செந்தில் பாலாஜியின் கோட்டை
கரூர் என்பது செந்தில் பாலாஜியின் அசைக்க முடியாத கோட்டை என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். எந்தவொரு பண்டிகையாக இருந்தாலும் கரூர் மக்களுக்கு பரிசு வழங்குவதை செந்தில் பாலாஜி வழக்கமாக வைத்துள்ளார். இதேபோல் அவர்களின் சுக, துக்கங்களிலும் பங்கெடுத்து நான் உங்களின் ஒருவன் என்ற நம்பிக்கையை தொடர்ந்து விதைத்து வருகிறார்.
மக்களுடன் நிற்கும் செந்தில் பாலாஜி
கரூர் சம்பத்தில் தவெகவினர் செந்தில் பாலாஜியை குறை சொன்னாலும், சம்பவம் நடந்தவுடன் மருத்துவமனைக்கு ஓடி வந்தது, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று ஆறுதல் தெரிவித்து அரசின் நிதியுதவியை அளித்தது என கரூர் மக்கள் தன்னை விட்டு விலகாமல் பார்த்துக் கொண்டார் செந்தில் பாலாஜி.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்
இப்போதும் தீபாவளி பரிசு கொடுப்பதன் மூலம் வரும் தேர்தலுக்கான ஆதாயமாகவும், கரூர் சம்பவத்தில் அவருக்கு இருக்கும் ஒன்றிரண்டு அதிருப்தியையும் சரிகட்டும் விதமாகவும் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார் செந்தில் பாலாஜி. ஒரு அரசியல்வாதி 'நான் இதை செய்வேன்; அதை செய்வேன்' என பேசிக் கொண்டிருந்தால் மட்டுமே மக்கள் மனதில் இடம்பிடிக்க முடியாது. பரிசுகளையோ, இலவச பொருட்களையோ வாரி வழங்கினால் மட்டுமே மக்கள் மனதில் இடம்பிடிக்க முடியும்.
எத்தனை பேர் வந்தாலும் முடியாது
அதை மிகச்சிறப்பாக செய்து வருகிறார் செந்தில் பாலாஜி. தவெகவினர் கரூர் மக்களிடம் அவரை பற்றி அவதூறுகளை பரப்பினாலும், 'நான் உங்களுடன் தான் நிற்கிறேன்' என தீபாவளி பரிசு பொருட்களை அள்ளிக் கொடுத்து மக்கள் கவனத்தை தன்னிடம் இருந்து வேறு பக்கம் திரும்பி விடாமல் பார்த்துக் கொண்டுள்ளார். ''இதுதான் அரசியல் அனுபவம். எத்தனை பேர் வந்தாலும் கரூர் மக்களையும், செந்தில் பாலாஜியையும் பிரிக்க முடியாது'' என்று அவரது ஆதரவாளர்களும், திமுகவினரும் தெரிவித்து வருகின்றனர்.

