இபிஎஸ் மீது எனக்கும் மன வருத்தம் உள்ளது. யாருக்கு மன வருத்தம் இருந்தாலும் அதை அவரிடம் நேரடியாக தெரிவிக்க வேண்டும் என்று அதிமுக மூத்த தலைவர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவில் உட்கட்சி பூசல் பெரிதாக வெடித்துள்ளது. ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உள்ள ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் கைகோர்த்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், 'இபிஎஸ்ஸை வீழ்த்தும் வரை ஓய மாட்டோம்' என்று பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் சபதம் விடுத்தார்.
செங்கோட்டையனை நீக்கிய இபிஎஸ்
ஏற்கெனவே செங்கோட்டையனின் பதவியை பறித்த இபிஎஸ், இப்போது அவரை அதிமுகவில் இருந்தும் நீக்கியுள்ளார். இதற்கு ரியாக்ட் செய்த செங்கோடையன், அதிமுகவில் இருந்து நீக்கியது மன வருத்தம் தான் என்று கூறி இபிஎஸ் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினர். மறுபக்கம் எடப்பாடியும், ஒபிஎஸ், டிடிவியுடன் சேர்ந்து செங்கோட்டையன் திமுகவின் பி டீம் ஆக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
செல்லூர் ராஜு அதிரடி பேட்டி
இந்த நிலையில், எனக்கும் மன வருத்தம் உள்ளது. ஆனால் தலைமை சொல்வதை கேட்டுக் கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, ''இபிஎஸ் செங்கோட்டையனை நீக்கி இருக்கிறார். தலைமை சொல்வதற்கு யாராக இருந்தாலும் கட்டுப்பட்டு தான் நடக்க வேண்டும் எனக்கும் கூடத்தான் மன வருத்தம் இருக்கு.
எனக்கும் மன வருத்தம் இருக்கு
யாருக்கு மன வருத்தம் இருந்தாலும் அதை பொதுச் செயலாளரை பார்த்து தான் சொல்ல வேண்டும். அதை விடுத்துவிட்டு ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்கக் கூடாது. பொதுச் செயலாளர் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு நாங்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்கத்தான் செய்கிறோம். எனக்கும் மன வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. என்னை அவர் நல்ல முறையில் தான் பார்த்துக் கொள்கிறார் கட்சிக்கு விரோதமாக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடிய இபிஎஸ்ஸை நாம் பாராட்ட வேண்டும்'' என்று தெரிவித்தார்.
திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்
மேலும் பேசிய செல்லூர் ராஜு, ''எங்களைப் பொறுத்தவரை திமுக தான் எதிரி. எங்களுக்கும் அவர்களுக்கும் எந்த ஒரு நிலத்தகராரும் கிடையாது. மக்கள் விரோத ஆட்சியாக இருக்கக்கூடிய திமுகவை வீட்டுக்கு அனுப்புவது தான் எங்களது எண்ணம்'' என்று தெரிவித்துள்ளார்.
