வடசென்னை பகுதியில் மழைநீர் தேங்காத வகையில் புதிய திட்டம்..! செப்டம்பர் மாதம் நிறைவடையும்- சேகர்பாபு நம்பிக்கை
வடகிழக்கு பருவமழை காலத்தில் வடசென்னை பகுதியில் மழைநீர் தேங்காத வகையில், மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி துரிதமாக மேற்கொண்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

பருவமழையை எதிர்கொள்ளும் தமிழக அரசு
பருவமழை காலம் என்றாலே சென்னை மக்களுக்கு பயம் தான் ஏற்படும். ஏனென்றால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து ஆண்டு தோறும் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல பேர் தாழ்வான பகுதியில் வீடுகளை கட்டவோ, வீடுகளை வாங்கவோ அஞ்சும் நிலையானது ஏற்பட்டுள்ளது. மேலும் சாலைகளிலும் தண்ணீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலையானது இருந்து வருகிறது. இதற்கு சரியான முறையில் மழை நீர் வடிகால் இல்லாத்து தான் காரணமாக கூறப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசு சார்பாக சென்னையில் மழை நீர் தேங்காமல் இருக்க திட்டம் வகுத்து செயல்படுத்தி வருகிறது.
வட சென்னையில் மழை நீர் வடிகால்
இந்தநிலையில் சென்னை திரு வி க நகர் தொகுதிக்குட்பட்ட , பட்டாளம் கே எம் கார்டன் பகுதியில், 49.80 லட்சம் மதிப்பீட்டில் கால்பந்து மைதானம் அமைக்கும் பணி, 49. 50 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சி கூடம் மற்றும் கழிப்பிடம் கட்டும் பணி மற்றும் சச்சிதானந்தம் தெருவில் 27.80 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மையம் கட்டும் பணி உள்ளிட்ட 2 கோடியே 30 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வடசென்னை பகுதியில் 270 கோடி மேற்கொள்ளப்பட்டு வரும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் செப்டம்பர் மாதத்துக்குள் நிறைவு பெறும் என தெரிவித்தார்.
செப்டம்பரில் பணி நிறைவு
வட சென்னை பகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு மழை காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மழை நீர் தேங்கியதாகவும், கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 20 ஆக குறைக்கப்பட்டதாக தெரிவித்தார். வரும் மழை காலத்தில் ஒரு இடத்திலும் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். இந்த நிகழ்ச்சியில் திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, சென்னை பெருநகர மாநகராட்சியின் மேயர் பிரியா, மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள்