நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீண்டும் ஒருமுறை செய்தியாளரிடம் கோபமாக பேசியுள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னை கோயம்பேட்டில் கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த சீமான், ஒரு செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆவேசமாக பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது தமிழக அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' என்ற பெயர் சேர்க்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி போராடி வருகிறது.

தமிழ் குறித்து பேசிய சீமான்

இது தொடர்பாக செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சீமான், ''தமிழ்நாட்டில் தமிழ் எங்கு வளர்க்கப்படுகிறது? 85,000 முதுநிலை ஆசிரியர்கள் தமிழில் தோல்வி அடைந்துள்ளனர். 50,000 பேர் பத்தாம் வகுப்பில் தமிழ் தேர்வு எழுத வர முடியாமல் சென்று விடுகின்றனர். இங்கு எங்கு தமிழ் வளர்ந்துள்ளது?'' என்று கேட்டார்.

செய்தியாளரிடம் டென்ஷன் ஆன சீமான்

அப்போது கேள்வி கேட்ட நிரூபர், 'இங்கு வேறு மொழி வளர்க்கப்படுவதில்லையே' என்றார். அதற்கு சீமான், 'இங்கு தங்கிலீஷ் வளர்க்கப்படுகிறதே' என்றார். பின்பு அந்த நிரூபர் ஏதோ கூற டென்ஷன் ஆன சீமான், 'என்ன இப்படி பேசிட்டு இருக்க. காலையில் உனக்கு எதுவும் பிரச்சனையாகி விட்டது என நினைக்கிறேன் தம்பி. நான் பயணம் போறேன். வெறி ஏத்தி விட்றாத; புரியுதா. வேறு ஏதாவது கேளு. காலையிலேயே இப்படி பண்ணிட்டு இருக்காத. எரிச்சலாகி விடும்'' என்று தெரிவித்தார்.

கடந்த மாதமும் இதே பிரச்சனை

அண்மை காலமாக சீமானுக்கும், செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. கடந்த மாதம் இதேபோல் புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், ஒரு செய்தியாளரை பைத்தியம் எனக்கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. ஒரு செய்தியாளரை சீமான் ''ஏய்.. நீ முதலில் மரியாதையா கேள்வி கேளுடா. போடா.. டேய்.. ஒரு மைக்கை தூக்கி கொண்டும், கேமரா எடுத்துக் கொண்டும் வந்தால் நீ என்ன பெரிய வெங்காயமா? ஆளையும் முகரையும் பாரு. போடா'' என்று கூறி கடும் விமர்சனத்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.