தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்தை நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, மயிலாப்பூர், புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை, நகர்புற பகுதிகளில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விரிவுபடுத்தி தொடங்கிவைத்து உரையாற்றினார். அப்போது இனி முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலம் 37,416 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 20 இலட்சத்து 59 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறுவர்.

மனதுக்கு மிகவும் நிறைவான நாள்

காலையில் இங்கே வந்து குழந்தைங்கள் கூட உணவு சாப்பிட்டவுடனே, இந்த குழந்தைகளைப் போலவே, எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது. எப்படி இன்றைக்கு முழுவதும் நீங்கள் ஆக்டிவாக இருப்பீர்களோ, அப்படி எனக்கும் இது ஆக்டிவான டே தான். ஆக்டிவான டே மட்டுமல்ல, மனதுக்கு மிகவும் நிறைவான நாள். இந்தத் திட்டத்தால் இருபது இலட்சம் குழந்தைகள் சாப்பிடுகிறார்கள் என்றால், இதைவிட மனநிறைவு என்ன இருக்க முடியம்?

காலை உணவுத் திட்டம்

பெருந்தலைவர் காமராசர் ஆட்சியில் மதிய உணவுத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்தது. இதன் தொடர்ச்சியாக காலை உணவுத் திட்டத்தை நம்முடைய திராவிட மாடல் அரசு தொடங்கினோம். இந்த திட்டத்தை துவங்குவதற்குக் காரணம் என்னவென்றால், ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாட்களில், சென்னை, அசோக் நகர் மகளிர் பள்ளிக்கு சென்றபோது, அங்கிருந்த மாணவிகளிடம், “காலையில் என்ன சாப்பிட்டீர்கள்?” என்று சாதாரணமாக கேட்டேன். ஆனால், நிறைய குழந்தைகள் சாப்பிடவில்லை என்று சொன்னார்கள். சில மாணவிகள், “டீ மட்டும் குடித்துவிட்டு வந்துவிட்டேன்” - “பன் சாப்பிட்டேன்” – இது போல சொன்னார்கள். இதை மனதில் வைத்துத்தான் காலை உணவுத் திட்டம் தேவை என்பதை அரசின் கொள்கையாகவே அறிவித்தேன்.

17 இலட்சம் மாணவ, மாணவியர்

2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் நாள், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில், மதுரை மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தேன். முதல்கட்டமாக, ஆயிரத்து 545 பள்ளிகளில், ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவர்கள் இந்த திட்டத்தால் பயனடைந்தார்கள். பிறகு, 25.08.2023 அன்று, முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த திருக்குவளையில், அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் இதை விரிவாக்கம் செய்தோம். 2024-ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளில், ஊரகப் பகுதிகளில் இருக்கக்கூடிய அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இதுவரை, 17 இலட்சம் மாணவ, மாணவியர் பயன்பெற்று வந்தார்கள்.

நம்பர் ஒன் மாநிலம் தமிழகம்

இந்த திட்டத்தின் அட்டகாசமான சக்சஸ் மற்றும் இது கொடுக்கக்கூடிய அபாரமான ரிசல்ட்டைப் பார்த்து, இனி, நகர்ப்புற பகுதிகளில் செயல்படுகின்ற 2 ஆயிரத்து 429 அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்கிறோம். இதனால், கூடுதலாக 3 இலட்சத்து 6 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற இருக்கிறார்கள். கிராண்ட் டோட்டலாக சொல்லவேண்டும் என்றால், இனி தமிழ்நாட்டில் செயல்படுகின்ற 37 ஆயிரத்து 416 அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் படிக்கின்ற 20 இலட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் தினம் தோறும் காலையில் சூடாக சுவையாக சத்தான உணவு சாப்பிட்டு கிளாஸ் ரூமுக்குள் தெம்பாக நுழைய இருக்கிறார்கள் ஒரே குறிக்கோள், "தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் நம்பர் ஒன் மாநிலமாக வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் எல்லா வகையிலும் முன்னேற வேண்டும் என தெரிவித்துள்ளார்.