- Home
- Tamil Nadu News
- 10ம் வகுப்பு மாணவர்களே ரெடியா! எதிர்பார்த்து காத்திருந்த முடிவுகள் இன்று வெளியாகிறது!
10ம் வகுப்பு மாணவர்களே ரெடியா! எதிர்பார்த்து காத்திருந்த முடிவுகள் இன்று வெளியாகிறது!
தமிழ்நாட்டில் ஜூலை மாதம் நடைபெற்ற 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28-ம் தேதி முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரையில் நடைபெற்றது. இந்த பொதுத் தேர்வினை 12,480 பள்ளிகளில் பயின்ற 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும், 25,888 தனித்தேர்வர்களும், 272 சிறைவாசிகளும் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினர். இதனையடுத்து மே 16ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.
இதில் மாணவிகள் 4,17, 183 பேரும், மாணவர்கள் 4,00,078 தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 93.80 சதவீதம் மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெறறுள்ளனர். மாணவர்களை காட்டிலும் மாணவிகள் 4.14% கூடுதலாக தேர்ச்சி பெற்றனர்.
இந்த தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகள், முடிவுகள் வெளியான மறுநாளே துணைத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது. அதேபோல், குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் தங்களது மதிப்பெண்களில் சந்தேகம் உள்ள மாணவர்களும் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முடிவுகள் இன்று வெளியாகிறது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் சசிகலா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த ஜூலை மாதம் நடந்த 10-ம் வகுப்பு துணைத் தேர்வை எழுதி மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையளத்தில் இன்று பிற்பகல் வெளியிடப்படுகிறது.
பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை. மறுகூட்டல் அல்லது மறுப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும் இன்று பிற்பகல் முதல் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.