பொள்ளாச்சி பள்ளியில் வயதுக்கு வந்த மாணவியை வகுப்பறைக்கு வெளியே தேர்வு எழுத வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏ.எஸ்.பி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

சுவாமி சித்பவானந்த மெட்ரிகுலேஷன் பள்ளி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த செங்குட்டை பாளையத்தில் சுவாமி சித்பவானந்த மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த 8ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த சில நாட்களுக்கு முன் வயதுக்கு வந்துள்ளார். 

வகுப்பறைக்குள் அனுமதிக்காத ஆசிரியர்

இந்நிலையில் தற்போது பள்ளிகளில் முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்று வருவதால், அந்த மாணவி தேர்வு எழுத பள்ளிக்கு வருகை தந்துள்ளார். அப்போது அந்த மாணவியை தலைமை ஆசிரியர் தேர்வெழுத வகுப்பறைக்குள் அனுமதிக்காமல், வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ளார். இதுதொடர்பாக பள்ளி மாணவி நடந்த சம்பவம் தொடர்பாக தாயிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தாய் மாணவியை தேர்வெழுத மறுநாளும் பள்ளிக்கு அழைத்து வந்துள்ளார்.

இதையும் படிங்க: தொண்டையில் சிக்கிய உயிர் மீன்! துடிதுடித்து உயிரிழந்த இளைஞர்! நடந்தது என்ன?

பொள்ளாச்சி ஏ.எஸ்.பி சிருஷ்டி சிங் விசாரணை

அப்போதும், அந்த ஆசிரியை மீண்டும் மாணவியை தேர்வறைக்கு வெளியே அமர வைத்து தேர்வெழுத செய்துள்ளார். இதை பள்ளி மாணவியின் தாய் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக வீடியோ வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, தற்போது பொள்ளாச்சி ஏ.எஸ்.பி சிருஷ்டி சிங், அந்த தனியார் பள்ளியில் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

பள்ளி முதல்வர் சஸ்பெண்ட்

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தர வேண்டும் என கோவை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோருக்கு தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதனிடையே பள்ளி மாணவியை வெளியே தரையில் அமரவைத்து தேர்வு எழுத வைத்த விவகாரத்தில் பள்ளி முதல்வர் ஆனந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றிக்கை 

முதல் மாதவிடாய் ஏற்பட்ட பட்டியலின மாணவியை தனியே அமர வைத்தாக குற்றச்சாட்டை அடுத்து இனிமேல் இதுபோல் மாணவிகளை தனியாக தரையில் அமரவைக்கக்கூடாது என கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது.