சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ், இவருடைய மகன் பென்னிக்ஸ். இவர்கள் சாத்தான்குளம் பஜார் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தனர். இந்நிலையில் அதிமுக ஆட்சி காலத்தில் 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில், கடையை தாமதமாக அடைத்ததாகக் கூறி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அப்போது காவல் நிலையத்தில் வைத்து போலீசார் நடத்திய கொடூரமான தாக்குதலில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த இரட்டை கொலை சம்பவம் சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை உடல் நலக்குறைவால் காலமானார். மீதம் உள்ள 9 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி முத்துக்குமரன் முன்னிலையில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2027 பக்கம் குற்றப்பத்திரிகையும், இரண்டாம் கட்டமாக 400 பக்கம் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் 6 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் மார்ச் 23-ம் தேதி இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.