ஜெயலலிதா நினைவு நாளில் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய சசிகலா, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என உறுதியளித்தார்.
மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். நினைவிடத்தின் முன் சில நிமிடங்கள் கண்கலங்கியபடி நின்று வணங்கிய அவர், ஜெயலலிதாவின் படத்தை நோக்கி கைகூப்பி “அம்மாவின் ஆசீர்வாதத்துடன் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்” என உறுதியளித்தார்.
ஒற்றுமை இருந்தால் வெற்றி உறுதி
பிறகு ஊடகங்களிடம் பேசிய சசிகலா, “அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைந்தால், அம்மாவின் அரசு மீண்டும் வருவது உறுதி” என நம்பிக்கை தெரிவித்துள்ளார். தன்னுடைய ஒரே நோக்கம் அதிமுகவை மீண்டும் உயர்த்துவதே என்றும், ஜெயலலிதாவின் அரசியல் வழியைக் காப்பது தான் தனது கடமை என்றும் கூறினார்.
சசிகலாவுடன் தினகரன்
இந்த நிகழ்வில் டிடிவி தினகரன், சசிகலாவின் உறவினர்கள், மேலும் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். மேலும் நினைவிடத்தை சுற்றி அதிமுக தொண்டர்களின் முழக்கங்கள் ஒலித்தன.
செங்கோட்டையன் பற்றி சசிகலா
முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்த முடிவைப் பற்றி சசிகலாவிடம் கேட்டபோது, வருத்தத்துடன் பேசிய பதிலளித்த சசிகலா “ஒருவரின் மீதுள்ள கோபத்தில் அவசரப்படக் கூடாது;மக்கள் இயக்கம் பெரிய முடிவுகள் சிந்தித்துப் போக வேண்டும்” என்று பேசினார். அவர் நேரடியாக விமர்சிக்கவில்லை. ஆனால் முடிவு தவறானது என்ற கருத்தை மறைமுகமாக வெளிப்படுத்தினார்.
திமுக அரசு செய்யும் அரசியல்
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பான விவகாரத்தில், சசிகலா திமுக அரசு தேவையற்ற அரசியல் செய்கிறது என குற்றம் சாட்டினார். "2014-ல் உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை அளித்துள்ளது. அதை மதிக்காமல் இந்த அரசு தேவையற்ற அரசியல் செய்கிறது" என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.
சசிகலாவின் உறுதிமொழி
ஜெயலலிதா நினைவு நாளில் சசிகலாவின் இந்த பேச்சு, “அம்மா ஆட்சி மீண்டும் வரும்” என்ற உறுதியும், பல அதிமுக தொண்டர்களுக்கு புதுஉற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும், அடுத்து சசிகலா அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடையும் என்றும் கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.


