நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கைது நடவடிக்கையில் முடிந்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு கைது நடவடிக்கையைக் கண்டித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியை தனியாருக்கு ஒப்படைக்கக் கூடாது, தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 நாட்களாக ரிப்பன் மாளிகை வளாகத்தில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனிடையே தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தொடர்பான வழக்கில், ரிப்பன் மாளிகை வளாகத்தில் போராட்டம் நடத்தும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டதால் தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் வலுக்கட்டாய இழுத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நீதிமன்றமும் காவல்துறையும் இணைந்து நடத்தும் மக்கள் விரோதப்போக்கு கவலைக்குரியதாக உள்ளது என வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு எக்ஸ் தளத்தில்: சென்னை மாநாகராட்சியின் தூய்மை பணியாளர்கள் தங்களை நிரந்தரப்படுத்தக்கோரி கடந்த 13 நாட்களாக அறவழியில் போராடி வந்தனர். அவர்களது கோரிக்கை ஞாயமானது என்பதை விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் எழுச்சித்தமிழர் திருமாவளவன் அவர்கள் போராட்டக்களத்திற்கு சென்று ஆதரவு தெரிவித்தார்.
இடது சாரி கட்சித்தலைவர்களுடன் முதல்வரை சந்தித்து தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினார். இச்சூழலில்,நீதிமன்ற உத்தரவின் பேரில் போராடும் மக்களை நள்ளிரவில் கைது செய்துள்ளது காவல்துறை. போராட்டத்தை ஆதரித்த பல சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக வழக்கறிஞர் நிலவுமொழி மற்றும் சமூக செயற்பாட்டாளர் தோழர் வளர்மதி போன்றோர் கைது செய்யப்பட்டு இரவு காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஏன் கைது செய்கிறீர்கள்? என கேள்வி கேட்ட தோழர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். காவல்துறையின் இப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. சனநாயக ரீதியாக போராடிய மக்களையும் ஆதரவாளர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவே சனநாயகத்துக்கு எதிரானதாகும். நீதிமன்றமும் காவல்துறையும் இணைந்து நடத்தும் மக்கள் விரோதப்போக்கு கவலைக்குரியதாக உள்ளது. தமிழ்நாடு அரசு உடனடியாக கைது செய்யப்பட்டோரை விடுதலை செய்வதோடு, போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கோரிக்கை வைக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
