அமித்ஷாவின் பேச்சு தமிழக மக்களை அவமதிப்பதாகவும், பாஜகவின் நோக்கம் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது மட்டுமல்ல, மற்ற கட்சிகளைக் கபளீகரம் செய்வதுதான் என்று ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.
அமித்ஷா பேச்சுக்கு திமுக பதிலடி : தமிழகத்தில் திமுக ஆட்சி அகற்றப்படும் என மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேசிய பேச்சிற்கு பதிலடி கொடுக்கும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வெளியிட்டுள்ளால். அதில், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற பாஜகவின் அஜண்டாவை போல ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் 'ஒரே ஆள் ஒரே பேச்சு' என ரீதியில் பேசி வருகிறார். "தமிழ்நாட்டிற்கு வந்து தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என வருத்தமாக இருக்கிறது" எனச் சொல்லியிருக்கிறார். கடந்த பிப்ரவரியில் கோவைக்கு வந்த போது இதே டயலாக்கைதான் பேசினார். தமிழ் மொழி மீதும் தமிழர்கள் மீதும் அமித்ஷா காட்டும் அக்கறை என்பது பசுந்தோல் போர்த்திய புலி.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா?
"ஒடிசா, ஹரியானா, மஹாராஷ்டிரா, டெல்லி போல தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சி மலரும்" எனச் சொல்லியிருக்கிறார் அமித்ஷா. கடந்த ஆண்டு நடந்த ஒடிசா சட்டமன்றத் தேர்தலைத் தமிழர்கள் எப்படி மறப்பார்கள்? ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமான தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பாண்டியனை பாஜகவினர் எப்படி யெல்லாம் மோசமாக விமர்சித்தார்கள்? "தமிழகத்தைச் சேர்ந்த பாண்டியனை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா?" என 2024 மே மாதம் அமித்ஷா சீறினார். இப்போது தமிழ், தமிழர்கள் என மதுரையில் வந்து கபட வேடம் தரிக்கிறார்."ஒடிசாவில் பூரி ஜெகநாதர் கோயிலில் இருக்க வேண்டிய புதையல் சாவி தமிழ்நாட்டிற்குச் சென்றுவிட்டது" எனச் சொல்லி தமிழர்களைத் திருடர்கள் என்பது போல ஒடிசா சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசி, கொச்சைப்படுத்திவிட்டு மதுரையில் கீதா உபதேசம் நடத்திக் கொண்டிருக்கிறார் அமித்ஷா.
தமிழர்களைக் கேவலப்படுத்திய பாஜக
அது மட்டுமா? ஐ.ஏ.எஸ். அதிகாரி பாண்டியனை போல ஒருவரைச் சித்தரித்து, தமிழர் வேட்டி சட்டை அணிவித்து. வாழை இலையில் பழைய சோறு வைப்பது போல ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வீடியோ வெளியிட்டு தமிழர்களைக் கேவலப்படுத்தியது. இவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணம் ஒடிசாவிலேயே இருக்கிறது.
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்த பிறகும் கூட வன்முறை வெறியாட்டம் நிற்கவில்லை. இன்றைக்கும் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இணையதளச் சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகளாக மணிப்பூர் கலவரத்தை அடக்க முடியாத பாஜக, தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை மணிப்பூராக மாற்றிவிடுவார்கள்.
திராவிட மாடல் ஆட்சியின் நலத்திட்டங்கள் மூலம் எங்களுடைய முதலமைச்சர் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் சென்று விட்டார். பத்து ஆண்டுகளாகச் சீரழிந்து கிடந்த தமிழ்நாட்டை வளமானதாக்கி தலை நிமிர வைத்துள்ளார். நான்காண்டுகள் அடிமை ஆட்சி நடத்திய எடப்பாடி பழனிச்சாமியால் இப்படி ஓர் ஆட்சியைக் கற்பனையிலும் தர இயலாது. அதிமுக என்னும் கட்சியை மிரட்டியே விழுங்கிக் கொண்டிருக்கும் அமித்ஷா, கூட்டணி அமைத்த அன்றே தனக்கு அடிமைதான் எடப்பாடி பழனிச்சாமி என்பதை உலகத்துக்கே காட்டினார். இன்று திமுக ஆட்சி மீது அவதூறு பொய் மூட்டைகளை அவிழ்த்து உள்ளார்.
மோடியின் பெயரைக் கூட போடாமல் விளம்பரம் செய்த பாஜக
அமித்ஷாவுக்கு 2021 சட்டமன்றத் தேர்தல் மறந்து விட்டது போலும். பாஜகவின் அண்ணாமலையே எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை பயன்படுத்தித்தான் பிரசாரம் செய்தார். மோடியின் பெயரைக் கூட போடாமல் விளம்பரம் செய்த பாஜகவினர் கதைகள் நிறைய இருக்கிறது. பாஜக தலைவர்கள் தயவு செய்து பிரசாரத்துக்கு வந்துவிட வேண்டாம் என்று அதிமுகவின் வேட்பாளர்கள் கெஞ்சும் அளவுக்கு பாஜக மீதான வெறுப்பு தமிழ்நாட்டில் நிலவியது.
அந்த வெறுப்பு அடங்கவில்லை என்பதைத்தான் அடுத்து வந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவும் காட்டியது. தமிழர்களையும் தமிழ்நாட்டையும் தொடர்ந்து வஞ்சிக்கும் பாஜக மீது அது இன்னும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிப்பதும் தமிழ்நாட்டுக்கான நிதி உரிமையை மறுப்பதும் தங்களுக்கு வாக்களிக்காத தமிழ்நாட்டு மக்களைப் பழிவாங்குவதற்காக பாஜக எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் பாஜக மீது தமிழ்நாட்டு மக்களுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலிலும் வாக்குச்சாவடியில் பாஜகவினருக்கும் அவருக்கும் துணை போகிறவர்களுக்கும் சரியான தீர்ப்பைத் தமிழர்கள் எழுதுவார்கள்.
இதெல்லாம் உளவுத் துறை மூலம் அமித்ஷாவுக்கு தெரியாமல் இருக்குமா? தெரியும். தேர்தலில் வெல்வது அல்ல அவர்களின் நோக்கம். அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளைக் கபளீகரம் செய்து அந்த இடத்திற்கு பாஜக வர வேண்டும் என்பதே அவர்களின் ஒற்றை இலக்கு. அதற்காக 2026 சட்டமன்றத் தேர்தலைப் பயன்படுத்துகிறார்கள். அமித்ஷா தொடங்கியுள்ள இந்தப் பிரசாரம் எங்களுக்கு மிகவும் வசதியானதுதான். ஏற்கெனவே சொன்னது போல ஆளுநர்தான் எங்களை வெற்றி பெற வைக்க போகிறார் என்று நினைத்தோம். ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கடிவாளம் போட்டு விட்டதால் அந்தப் பணியைத் தற்போது அமித்ஷா கையில் எடுத்துள்ளார். அவருக்கு எங்கள் நன்றிகள்.
தோல்வியை மட்டும் சந்திக்கும் அதிமுக- பாஜக கூட்டணி
'2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி வெற்றிபெறும்" என்று அமித்ஷா தெரிவித்திருக்கிறார். அவர் தமிழ்நாட்டிற்கு வந்து இப்படிப் பேசுவது முதல்முறை அல்ல. ஏற்கனவே 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது இதையே பேசினார். 2019, 2024 மக்களவைத் தேர்தல்களின் போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழ்நாட்டில் அதிக இடங்களை கைப்பற்றும் என்று பேசினார். அவர் பேசியது எதுவுமே கடந்த காலங்களில் நடக்கவே இல்லை. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவான நாளில் இருந்தே தோல்விகளை மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கிறது.
தொண்டர்களின் நம்பிக்கையையே பெற முடியாதவர்கள் மக்களின் நம்பிக்கையை மட்டும் எப்படிப் பெற முடியும்? எப்போது பிரிவார்கள்? எப்போது இணைவார்கள்? என்கிற குழப்பத்தில் தொண்டர்கள் உள்ளதால் எத்தனை "ஷா" கள் வந்தாலும் தமிழ்நாட்டில் ஒன்றும் செய்ய முடியாது. 2018-ம் ஆண்டு தமிழ்நாட்டின் நலனை முன்னிறுத்தித் தொடங்கிய திமுக தலைமையிலான கூட்டணி 13 தேர்தல்களை சந்தித்து வெற்றி பெற்றது. தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்ற திமுக கூட்டணி 2026 தேர்தலில் மட்டுமல்ல அதன் பிறகு வரும் தேர்தல்களிலும் தொடர் வெற்றியைப் பெறும் ஆர். எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
