மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் காலதாமதம் செய்வதாக தமிழக அரசு குற்றம்சாட்டிய நிலையில், இதை மறுத்து ஆர்.என்.ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் திமுக அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. மேலும் தமிழக அரசுக்கு எதிராக அவதூறு பரப்புவதை ஆளுநர் வாடிக்கையாக வைத்துள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலி குற்றம்சாட்டி இருந்தார்.
ஆளுநர் மாளிகை விளக்கம்
இந்த நிலையில், தமிழக அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் காலதாமதம் செய்யவில்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ''2025 ஆம் ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி வரை பெறப்பட்ட மசோதாக்களில் 81 சதவீதம் ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பொய் குற்றச்சாட்டு
கடந்த 3 மாதங்களில் மட்டும் 95% மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக 13% மசோதாக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆகவே ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு கூறுவது அடிப்படை ஆதாரமற்றவையாகும். இந்திய அரசியலமைப்பின் விதிகளின்படி ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.
மக்களின் நலன்களை பாதுகாக்கும் ஆளுநர்
தமிழக மக்களின் நலன்களைப் பாதுகாக்க, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த கவனத்துடன் மசோதாக்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. நேர்மை, வெளிப்படைத்தன்மை, அர்ப்பணிப்புடன் அரசியலமைப்பு கடமைகளை ஆளுநர் செய்து வருகிறார்'' என்று கூறப்பட்டுள்ளது. ஆளுநர் மசோதாக்களுக்கு காலம்தாழ்த்துவதாக தமிழக அரசு கூறியிருக்கும் நிலையில், ஆர்.என்.ரவி அதை மறுத்துள்ளது தமிழக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.
