ஆர்.எம்.வீரப்பனுக்கு திடீர் உடல் நிலை பாதிப்பு..! மருத்துவமனையில் அனுமதி
திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் உடல் நிலை பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எம்ஜிஆரின் நிழல் ஆர்.எம்.வீ
அதிமுக உருவாக முக்கிய நபராக கருதப்படும் ஆர்.எம்.வீரப்பன்,1977 - 1986 வரை மாநிலச் சட்ட மேலவை உறுப்பினராகவும், 1986 இடைத்தேர்தலில், திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் மற்றும்1991 இடைத்தேர்தலில், காங்கேயம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். மேலும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெ. ஜெயலலிதா அமைச்சரவைகளில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு ஜெயலலிதாவுடன் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார்.
ஜெயலலிதாவுடன் மோதல்
பாட்ஷா திரைப்படத்தையும் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்துள்ளார். அந்த படத்தின் வெற்றி விழாவின் போது அதிமுக ஆட்சியை நடிகர் ரஜினி விமர்சித்த போது அந்த மேடையில் ஆர்.எம்.வீரப்பன் அமர்ந்திருந்த காரணத்தால் அவரை கட்சியை விட்டு நீக்கி ஜெயலலிதா நடவடிக்கை எடுத்திருந்தார். இதனையடுத்து ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவில் இருந்து பிரிந்து வந்த இவர் பின்நாளில் எம்.ஜி.ஆர் கழகம் என்ற கட்சியை நிறுவினார்.
ஆர்எம்வீக்கு உடல்நிலை பாதிப்பு
கடந்த 9 ஆம் தேதி ஆர்.எம்.வீரப்பன் தனது 98வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது ஆர்.எம்.வீ பிறந்தநாளையொட்டி சென்னை தியாகராயர் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். 98-வயதாகும் முன்னாள் அமைச்சரான இவர், தற்போது வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சென்னையிலுள்ள அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், தொலைபேசியில் கேட்டறிந்து கொண்டதாக கூறப்படுகின்றது.
இதையும் படியுங்கள்
நடிகை விஜயலட்சுமியின் தற்கொலை மிரட்டல்... அலறி அடித்து காவல் நிலையம் ஓடிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி