டிஜிட்டல் மோசடியில் ஈடுபடுத்தப்பட்ட தமிழர்கள்.. மியான்மரில் சிக்கி தவித்த 13 பேர் மீட்பு..
தகவல் தொழில்நூட்பத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மியான்மரில் சிக்கி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தப்பட்ட 13 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மியான்மரில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் உட்பட இந்தியர்கள் தங்களை மீட்க கோரி கண்ணீர் மல்கி கோரிக்கை வைத்த வீடியோ வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மியான்மரில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்கும் படி பிரதமர் நரேந்திரமோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
சட்டவிரோதமாக எல்லை கடந்ததாக தாய்லாந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள், மத்திய வெளியுறவுத்துறை மற்றும் தமிழக அரசின் தொடர் முயற்சியினால் மீட்கப்பட்டுள்ளனர். மியான்மர் மற்றும் தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரங்கள் முதலாவதாக மியாவாடி பகுதியில் இருந்து 32 இந்தியர்களை மீட்டுள்ளனர்.
மேலும் படிக்க:கால்நடைத் துறையில் தொழில் தொடங்க ஆர்வமுள்ளதா? இதோ உங்களுக்கான அறிவிப்பு!!
தாய்லாந்து நாட்டின் பாங்காங்கிலிருந்து நேற்று விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர். அதில் 13 தமிழர்கள் இன்று அதிகாலை சென்னை விமானநிலையம் வந்தடைந்தனர். அவர்களை வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.
சமீபத்தில் மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில்,” தாய்லாந்தில் அதிக சம்பளத்தில் டேட்டா எண்டரி வேலைகள் என்று சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்கள் மூலம் ஈர்க்கப்படும் இளைஞர்கள், சட்டவிரோதமாக மியான்மர் நாட்டில் உள்ள மியாவாடி பகுதி அழைத்து செல்லப்பட்டு, மோசடி செயல்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த பகுதி யாரும் அணுகுவதற்கும் மிக கடினமானது” என்று குறிப்பிட்டிருந்தது.
மேலும் படிக்க:மதுரைக்கும் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள் முதல்வருக்கு உதயகுமார் கோரிக்கை
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து முகவர்களை பயன்படுத்தி வேலைக்கு ஆட்களை எடுத்து, டிஜிட்டல் மற்றும் கிரிப்போ கரன்சி மோசடிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்கு மறுப்பு தெரிவித்து அங்கிருந்து தப்பித்து செல்ல முயன்றால், கடுமையான தண்டனை வழங்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர்.