R. B. Udhayakumar : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திடீர் கைது.! மதுரையில் அதிமுகவினர் போராட்டம்
கப்பலூர் டோல்கேட்டை இடமாற்றம் செய்து நிரந்தரமாக தீர்வு காண கோரி திருமங்கலம் தொகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர், இதனை தொடர்ந்து பல கட்ட பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டார்.
கப்பலூர் டோல்கேட்- உண்ணாவிரத போராட்டம்
தென் தமிழகத்தில் நுழைவாயிலாக உள்ள மதுரைக்கு முன்பாக கப்பலூர் டோல்கேட் உள்ளது. இந்த டோல்கேட் விதிமுறையை மீறி கடந்த 2010 ஆண்டு வைக்கப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளூர் மக்களுக்கு கட்டண விலக்கு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2021ஆம் ஆண்டு முதல் மீண்டும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளூர் மக்களின் பணம் பறிக்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த டோல்கேட்டை அகற்றப்பட வேண்டும் என்று திருமங்கலம் தொகுதி மக்கள் முழு கடை அடைப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
போலீசாருடன் வாக்குவாதம்
இந்தநிலையில் தான் கப்பலூர் டோல்கேட் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத காரணத்தால் இன்று கப்பலூர் டோல்கேட்க்கு பகுதிக்கு வந்த அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார், டோல்கேட் தொடர்பாக பொதுமக்களிடத்தில் மனுக்கள் வாங்க சென்றார். ஆனால் போலீசார் அனுமதி மறுத்த நிலையில் கடும் வாக்குவாதத்திற்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டது.
அப்போது உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொதுமக்களையும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரையும் போலீசார் கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 2021 ஆண்டில் அப்போது எதிர்க்கட்சி தலைவவராக இருந்த ஸ்டாலின் இப்பகுதிக்கு வந்த போது திமுக ஆட்சி மூன்று மாதங்களில் வந்துவிடும் அப்போது கப்பலூர் டோல்கேட் அகற்றப்படும் என்று கூறினார் அவர் கூறி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
ஆர்.பி.உதயகுமார் கைது
சட்டத்துக்கு புறம்பாக அமைக்கப்பட்ட கப்பலூர் டோல்கேட்டை நிரந்தரமாக அகற்றப்பட வேண்டும், அதேபோல் நிலுவை கட்டணம் என அனுப்பப்பட்ட லீகல் நோட்டீசை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து மேல கோட்டையில் உள்ள கல்யாண மண்டபத்தில் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டவர்களை போலீசார் அடைத்து வைத்தனர். அங்கும் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை உதயகுமார் ஈடுபட்டு வருகிறார்.