வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிக்கு 5 கோடி நிதி உதவி.! சகோதர மாநிலத்திற்கு எந்த உதவியையும் செய்ய தயார்-ஸ்டாலின்
வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவால் உயிரிழந்த மக்களுக்கு இரங்கல் தெரிவித்தும், கேரள அரசிற்கு தேவையான உதவிகள் வழங்கிட தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உயிரோடு மண்ணில் புதைந்த உயிர்கள்
கேரள மாநிலத்தில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாகவே மழையானது வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியும், லேசான நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் இன்று அதிகாலையில் 2 மணியில் இருந்து 4 மணிக்குள் அடுத்தடுத்து மொத்தம் 3 இடங்களில் மிகப்பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டது. குறிப்பாக வயநாடு பகுதியில் உள்ள சூரல் மலை, மேப்பாடி, முண்டகை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில், அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த மக்கள் உயிர்கள் மண்ணுக்கடியில் புதைந்துவிட்டது.
இருள் மற்றும் கன மழை பாதிப்பு காரணமாக மீட்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் உயிரிழப்பு அதிகரிக்க தொடங்கியது.
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது எப்படி.? நடந்தது என்ன.? 300 வீடுகள், பாலம் மாயம்- வெளியான ஷாக் தகவல்
உதவிக்கரம் நீட்டும் தமிழகம்
இந்தநிலையில் வயநாடு நிலச்சரிவு தொடர்பாக தமிழக முதலமைச்சர் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார். இதனையடுத்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் நிலச்சரிவு நிகழ்வுகள் மற்றும் அதனால் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் பறிபோனதைக் குறித்து அறிந்து மிகவும் வேதனைக்குள்ளானேன். இன்னமும் பலர் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது. முழுவீச்சில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் நிச்சயம் அனைவரையும் காப்பாற்றும் என்று நம்புகிறேன்.
நமது சகோதர மாநிலமான கேரளம் நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில், அவர்களுக்குத் தேவைப்படும் எந்த விதமான இயந்திரம். பொருள் மற்றும் மனித ஆற்றல் சார்ந்த உதவியையும் வழங்கத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் கேரள அரசுக்குத் துணையாக பணியாற்றிட தமிழ்நாட்டிலிருந்து இரண்டு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான டாக்டர் கீ.சு. சமீரன், மற்றும் திரு. ஜானி டாம் வர்கீஸ், ஆகியோர் தலைமையில் மீட்புக் குழுவினரை உடனடியாக அனுப்பிட உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்கென கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 கோடி ரூபாயினை வழங்கிடவும் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டிலிருந்து அனுப்பப்படவுள்ள மீட்புக் குழுவில் தீயணைப்புத் துறையிலிருந்து 20 தீயணைப்பு வீரர்கள் ஒரு இணை இயக்குநர் தலைமையிலும், 20 மாநிலப் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு வீரர்கள், ஒரு காவல் கண்காணிப்பாளர் தலைமையிலும், 10 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய ஒரு மருத்துவக் குழுவினரும் கேரள அரசுடன் மீட்பு மற்றும் மருத்துவச் சிகிச்சைப் பணிகளில் இணைந்து பணியாற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவானது இன்றே கேரளாவிற்குப் புறப்பட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.