செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் விருதுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் என ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தியுள்ளார்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியர் விருது, குறள் பீடம்விருது, இளம் அறிஞர் விருது ஆகியவற்றை உடனடியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து ரவிக்குமார் எம்.பி., எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 7 ஆண்டுகளாக அறிவிக்கப்படாமல் இருக்கும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியர் விருது, குறள் பீடம் விருது, இளம் அறிஞர் விருது ஆகியவற்றை உடனடியாக அறிவிக்க வேண்டும். அந்த விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தால் 56 பேர் அவற்றைப் பெற்றிருப்பார்கள்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தமிழ் மொழியை வளர்க்கும் நோக்கத்துடன், இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் (MoE) மொழிப் பிரிவின் கீழ் தன்னாட்சி முறையில் இயங்குகிறது. 2008 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி நிறுவப்பட்ட செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT) தமிழின் தொன்மை மற்றும் தனித்துவத்தின் முக்கிய அம்சங்களைக் குறிப்பிடும், தமிழின் செம்மொழிக் கட்டம் (ஆரம்ப காலங்கள் முதல் கி.பி. 600 வரை) தொடர்பான ஆராய்ச்சியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. அது தமிழ் அறிஞர்களைக் கௌரவிக்க தொல்காப்பியர் விருது, குறள் பீடம் விருது மற்றும் இளம் அறிஞர் விருது என மூன்று தனித்துவமான விருதுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

தொல்காப்பியர் விருது: பாராட்டுச் சான்றிதழ், நினைவுப் பரிசு, ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு ஆகியவை அடங்கியது. ஒவ்வொரு ஆண்டும், இது ஒரு இந்திய அறிஞருக்கு அளிக்கப்பட வேண்டும்.
குறள் பீடம் விருது: இந்த விருது பாராட்டுச் சான்றிதழ், நினைவுப் பரிசு மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு ஆகியவற்றை உள்ளடக்கியது. ஆண்டுதோறும் இரண்டு விருதுகள் வழங்கப்படுகின்றன - ஒன்று வெளிநாட்டு அறிஞருக்கு மற்றொன்று வெளிநாடு வாழ் இந்தியருக்கு.
இளம் அறிஞர் விருது: இளம் அறிஞர் விருது, பாராட்டுச் சான்றிதழ், நினைவுப் பரிசு மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், முப்பது முதல் நாற்பது வயது வரையிலான ஐந்து இளம் இந்திய அறிஞர்கள் அங்கீகரிக்கப்படுகிறார்கள்.
போலி கையெழுத்து: ராகவ் சத்தா மீதான புகாருக்கு ஆம் ஆத்மி விளக்கம்!
இன்றுவரை, 66 அறிஞர்கள் இந்த மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றுள்ளனர் என அந்நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த விருதுகளுக்கான அறிவிப்பு கடைசியாக 2016 இல் நடந்தது, அதன் பிறகு எந்த விருதுகளும் வழங்கப்படவில்லை. விருதுகளைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கும் பொறுப்பு கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ளது. இந்தக் கடமைகளைப் புறக்கணிப்பது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இருப்பையே அச்சுறுத்துவதாக உள்ளது.
எனவே, ஒன்றிய கல்வி அமைச்சர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, விருதுகளை அறிவிக்குமாறும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடர்ந்து வெற்றிகரமாக செயல்படுவதற்கு உதவுமாறும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்பும் நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி., வலியுறுத்திய பின்பே செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு இயக்குநர் நியமிக்கப்பட்டார். கலைஞர் விருதும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
