போலி கையெழுத்து: ராகவ் சத்தா மீதான புகாருக்கு ஆம் ஆத்மி விளக்கம்!
ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. ராகவ் சத்தா மீதான போலி கையெழுத்து தொடர்பான புகாருக்கு அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது
டெல்லி அதிகாரத்தை கட்டுப்படுத்தும் சர்ச்சைக்குரிய மசோதாவை நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. முன்னதாக, இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. ராகவ் சத்தா, மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பும் தீர்மானத்தை முன்வைத்தார். அந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிராகரிக்கப்பட்டது.
இதனிடையே, ராகவ் சத்தா கொண்டு வந்த தீர்மானத்தில் தங்களது கையெழுத்து போலியாக இடப்பட்டுள்ளதாக அதிமுக மாநிலங்களவை எம்.பி., தம்பிதுரை உள்பட 4 எம்.பி.க்கள் சிறப்புரிமைக் குழுவைக் குறிப்பிட்டு புகார் அளித்தனர். அந்த தீர்மானத்தில் தங்களது பெயர் எப்படி சேர்க்கப்பட்டது என தெரியவில்லை எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா, “சிறப்புரிமைக் குழு எனக்கு நோட்டீஸ் அனுப்பட்டும். குழுவிடம் எனது பதிலை அளிப்பேன்.” என தெரிவித்திருந்தார்.
நம்பிக்கையில்லா தீர்மானம்: பிரதமர் மோடி இன்று பதிலுரை!
ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா போலி கையெழுத்து விவகாரத்தை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில், ராகவ் சத்தா மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆம் ஆத்மி கட்சி விளக்கம் அளித்துள்ளது. நாடாளுமன்ற விதிகள் மற்றும் நடைமுறைகளின்படி, தேர்வுக் குழுவுக்கு அனுப்பும் பெயர்களை முன்மொழிவதற்கு முன் கையெழுத்தோ அல்லது எழுத்துப்பூர்வ ஒப்புதலோ தேவையில்லை. எனவே, போலி கையெழுத்து என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது.
“ராகவ் சத்தா வெறுமனே பெயர்களை ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது தொடர்பான ஒரு முன்மொழிவை மட்டுமே வைத்தார். தேர்வுக் குழுக்கள் என்பவை அனைத்து முக்கிய கட்சிகளின் உறுப்பினர்களை உள்ளடக்கிய கட்சி சார்பற்ற குழுக்கள் ஆகும். அக்குழுவில் இருந்து ராகவ் சத்தாவால் பெயர்கள் முன்மொழியப்பட்டன. அது ஒரு முன்மொழிவு மட்டுமே. ஒன்று சபையால் அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் அல்லது நிராகரிக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் நிராகரிக்கப்பட்டுள்ளது.” எனவும் ஆம் ஆத்மி கட்சி விளக்கம் அளித்துள்ளது.