Asianet News TamilAsianet News Tamil

பூம்புகார்: நனவாகுமா கலைஞரின் கனவு - ரவிக்குமார் எம்.பி.!

கலைஞரின் நூற்றாண்டில்  பூம்புகாரைப் பொலிவுபெறச் செய்வது அவரது கனவை நனவாக்குவது மட்டுமல்ல, தமிழரின் பெருமையை நிலைநாட்டுவதும்கூட என ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்

Ravikumar mp request TN CM MK Stalin to consider should consider to set up port in poompuhar smp
Author
First Published Jun 3, 2024, 12:11 PM IST

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி 1957ஆம் ஆண்டில் விடுத்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பூம்புகாரில் துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கு வாய்ப்பிருக்கிறதா என்பதை முதல்வர் ஸ்டாலின் பரிசீலிக்க வேண்டும் என விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “முத்தமிழ் அறிஞர் கலைஞர் 1957 ஆம் ஆண்டு குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக ஆனார். சட்டமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகள் இப்போது படித்தாலும் சுவை குன்றாமல் இருக்கின்றன. எந்தவொரு பிரச்சினையையும் இலக்கிய நயத்தோடு எடுத்துரைக்கும் திறன் அவருடைய தனித்திறன்களில் ஒன்றாகும்.

1957ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் நாள் சிறு துறைமுகங்கள் தொடர்பான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய கலைஞர் அவர்கள் பூம்புகார் துறைமுகத்தைப் புதுப்பித்துப் பயன்படுத்த முன்வர வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

‘தமிழ்நாட்டிலே துறைமுகங்கள் தேவை என்று முன்பெல்லாம் வெள்ளைக்கார துரை முகங்களைப் பார்த்துக் கேட்டோம். இன்றைய தினம் நம்முடைய நாட்டு மந்திரிமார்களுடைய முகங்களைப் பார்த்துத் தமிழகத்தில் துறைமுகங்கள் நிரம்ப நிரம்ப வேண்டும் என்று கேட்கின்ற நிலைமையில் இருக்கிறோம்.

தமிழகத்தில் ஒரு காலத்திலே எந்த அளவுக்கு நல்ல துறைமுகங்கள் இருந்தன என்பதையும், அத்தகைய துறைமுகங்கள் வாயிலாக யவனத்துக்கும் கிரேக்கத்திற்கும் தமிழகத்தினுடைய மயிலிறகு, மிளகு போன்ற பொருள்கள், தமிழகத்தினுடைய சிறப்பான முத்துக்கள் எந்த அளவுக்கு ஏற்றுமதி ஆயின என்பதையும் நம்முடைய வரலாறுகள் விளக்கி நமக்குப் பெருமை அளித்துக் கொண்டிருக்கின்றன. காவிரி பூம்பட்டினம் என்று இன்றைய தினம் வழங்கப்படும் ஊர் பூம்புகார் என்று வழங்கி வந்தது. நான் பூம்புகார் என்று சொல்லும்போது ஒரு சிலருக்கு நான் ஏதோ ‘புகார்’ கூறுகிறேன் என்று கூடத் தோன்றலாம். சிலப்பதிகாரத்தில் மிக மிக அழகுற விளக்கப்படுகிறது: 

“நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்”…

என்று சொல்லக்கூடிய இந்தத் துணைக் கண்டத்தினுடைய பொருட்கள் அத்தனையும் வந்து குவிகின்ற மாபெரும் துறைமுகப்பட்டினம் அது. வெளிநாடுகளிலிருந்து சிறப்பான குதிரைகள் வந்து இறங்கும் அத்தகைய பெருமை படைத்ததாகும். பூம்புகார் துறைமுகம் ஒரு காலத்தில் ஏற்றமும் பெற்றியும் பெற்று விளங்கியது. அத்தகைய துறைமுகம் இன்றைய தினம் கடலால் அரிக்கப்பட்டுப் போய் விட்டாலும் கூட, இன்று நாட்டிலே முற்போக்கும் நல்ல வளமும் வேண்டும் என்று விரும்புகிற இந்த அமைச்சரவை நாகப்பட்டினம் துறைமுகத்தைப் விருத்தி செய்வதோடு கூட, தமிழகக் கரையோரங்களில் உள்ள துறைமுகங்களை விருத்தி செய்வதோடு கூட, மாமல்லபுரத்திலிருந்து, அழிந்துவிட்ட துறைமுகங்களையும் மீண்டும் புதுப்பிக்க முயற்சி எடுத்துக் கொள்வதோடு கூட, பூம்புகார் என்னும் பழைய துறைமுகத்தையும் மீண்டும் அங்கே தோற்றுவிக்கக்கூடிய முயற்சியும் எடுத்துக் கொள்ளுமேயானால் இலக்கிய கால எழில்மிக்கத் துறைமுகம் ஒன்றையும், தமிழகத்தினுடைய வாணிபத்தை உலகெங்கும் பரப்பிய அத்தகைய துறைமுகம் ஒன்றையும் மீண்டும் நாம் தோற்றுவித்தோம் என்ற பெருமைக்கு உள்ளாவோம்”  என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபின் பூம்புகாரின் பெருமையை உலகுக்கு உணர்த்த அங்கே சிலப்பதிகாரக் கலைக்கூடத்தை அமைத்தார். பூம்புகார் என்ற பெயரில் கப்பல் போக்குவரத்துக் கழகத்தை 1974 இல் நிறுவினார். ஆனாலும்கூட அங்கே துறைமுகம் உருவாக்கப்பட வேண்டும் என்ற அவரது திட்டம் செயல்வடிவம் பெறவில்லை. 

தமிழ்நாட்டில் சென்னை, எண்ணூர், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் மூன்று துறைமுகங்கள் உள்ளன. இவை தவிர, 17 சிறிய துறைமுகங்கள் உள்ளன. இவற்றில் குறிப்பிட்ட தேவைகளுக்காக இயங்கக் கூடிய சிறு துறைமுகங்களும் உள்ளன. அதாவது, ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலையின் தேவைக்காக (Captive ports) அந்தத் துறைமுகத்தில் பொருள்களை இறக்குமதி செய்வார்கள். உதாரணமாக, திருக்கடையூரில் உள்ள சிறிய துறைமுகத்தில் நாப்தாவை இறக்குமதி செய்கின்றனர். அங்கு நாப்தா தொழிற்சாலை ஒன்று உள்ளது. அந்த நிறுவனத்துக்கான துறைமுகமாக இது உள்ளது.

தேர்தல் முடிவுகள் கருத்துக்கணிப்புகளுக்கு எதிர் மாறாக வரும் - சோனியா காந்தி நம்பிக்கை!

அனல்மின் நிலைய பணிகளுக்காக காட்டுப்பள்ளி துறைமுகம் உள்ளது. தரங்கம்பாடியில் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்துக்காக ஒன்று செயல்படுகிறது. நாகப்பட்டினத்தில் எண்ணெய் எடுப்பதால் அங்கே ஒரு துறைமுகம் உள்ளது. திருக்கடையூரில் உள்ள நாப்தா கம்பெனி துறைமுகத்தைப் பயன்படுத்துவதால் மாநில அரசுக்கு வருவாய் வருகிறது. கூடங்குளத்தில் அணுமின் நிலைய பணிகளுக்காகக் கொடுத்துள்ளனர். மற்றவை எல்லாம் பொதுவான துறைமுகங்களாக உள்ளன. 

முத்தமிழறிஞர் கலைஞர் 1957 இல் விடுத்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பூம்புகாரில் துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கு வாய்ப்பிருக்கிறதா என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பரிசீலிக்கவேண்டும். பூம்புகாரில் 2017 ஆம் ஆண்டிலிருந்து மீன்பிடித் துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு படகு நிறுத்தும் தளத்தை 200 மீட்டர் நீட்டிக்கவும், முகத்துவாரத்தை தூர்வாரவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பேரறிஞர் அண்ணா அவர்களின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற கலைஞர் அவர்கள் 1968 ஆம் ஆண்டு பூம்புகாரில் சிலப்பதிகாரக் கலைக்கூடம் அமைக்க அடிக்கல் நாட்டினார். அண்ணாவின் மறைவுக்குப்பின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அவர் 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் நாள் அதைத் திறந்துவைத்தார்.  2023 ஏப்ரலில் பொன்விழா நிறைவைக் கண்ட  சிலப்பதிகாரக் கலைக்கூடத்தை மீண்டும் புதிய பொலிவுடன் சீரமைக்க முதலமைச்சர் முன்வரவேண்டும். முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டில்  பூம்புகாரைப் பொலிவுபெறச் செய்வது அவரது கனவை நனவாக்குவது மட்டுமல்ல, தமிழரின் பெருமையை நிலைநாட்டுவதும்கூட.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios