தேர்தல் முடிவுகள் கருத்துக்கணிப்புகளுக்கு எதிர் மாறாக வரும் - சோனியா காந்தி நம்பிக்கை!

மக்களவைத் தேர்தல் முடிவுகள் கருத்துக்கணிப்புகளுக்கு எதிர் மாறாக வரும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்

Lok Sabha election results would be completely opposite to the prediction made by exit polls says sonia gandhi smp

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இறுதி மற்றும் 7ஆவது கட்ட வாக்குப்பதிவு நேற்று முன் தினம் நடைபெற்றது. மக்களவைத் தேர்தலோடு சேர்த்து ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

முன்னதாக, மக்களவை தேர்தலின் அனைத்து கட்ட வாக்குப்பதிவுகளும் முடிவடைந்ததையடுத்து, பெரிதும் எதிர்பார்ப்புக்குள்ளான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று முன் தினம் மாலை வெளியாகின. பல ஊடக நிறுவனங்கள் தங்களது கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. பெரும்பாலான கருத்து கணிப்புகளில் பாஜக கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளன. அதேபோல், இந்தியா கூட்டணி 145 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் பெரும்பாலான கருத்து கணிப்புகள் கணித்துள்ளன.

பாஜக 370 இடங்களை தாண்டுமா? நிழல் பந்தைய சந்தையில் புக்கிகள் எதிர்பார்ப்பு என்ன?

இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் முடிவுகள் கருத்துக்கணிப்புகளுக்கு எதிர் மாறாக வரும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் 100ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு டெல்லியில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு கலைஞர் கருணாநிதிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான சோனியா காந்தி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  அவர், “நாளைய தேர்தல் முடிவுகள் கருத்துக்கணிப்புகளுக்கு அப்படியே எதிர் மாறாக வரும். பொறுத்திருந்து பாருங்கள்.” என நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு மோடியின் கற்பனை கருத்துக்கணிப்பு என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். “இது கருத்துக்கணிப்பு அல்ல. மோடி ஊடகத்தின் கணிப்பு. அவரது கற்பனை கருத்துக்கணிப்பு. இந்தியா கூட்டணி 295 இடங்களில் வெற்றி பெறும்.” என ராகுல் காந்தி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios