பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடரும் நிலையில், ராமதாஸுக்கு ஆதரவாக செயல்படும் சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ அருளுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

PMK MLA Arul Admitted Hospital: விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது ராமதாஸின் பேரன் முகுந்தன் பரசுராமனை, பாமகவின் இளைஞரணி தலைவராக நியமிக்கப்படுவதாக அறிவித்தார். இதற்கு அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து இவரது மோதல் நாளுக்கு நாள் அதிகரித்தது.

ராமதாஸ் - அன்புமணி மோதல்

இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் அன்புமணியை தலைவர் பொறுப்பில் இருந்து நீக்குவதாகவும் இனி அவர் செயல் தலைவராக செயல்படுவார் என ராமதாஸ் அறிவிப்பை வெளியிட்டார். மேலும் தானே தலைவர் பொறுப்பில் தொடர்வதாக அறிவித்தார். பின்னர் தைலாபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராமதாஸ்: அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசியல் அரங்கை அதிர வைத்தார். இவரை சாமாதனம் செய்யும் முயற்சியில் பாமக மூத்த நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் ஈடுபட்டும் சமாதானம் ஆகவில்லை.

அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு 

தனது மூச்சு இருக்கும் வரை அன்புமணிக்கு தலைவர் பதவியை அளிக்க மாட்டேன் என்று ராமதாஸ் அறிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் அன்புமணி ஆதரவு மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், பொதுச்செயலாளர், மாநில நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் ராமதாஸ் நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். மறுபுறம் அந்தந்த பதவியில் நிர்வாகிகள் தொடர்வதாக அன்புமணி அறிவிப்பை வெளியிட்டு வருகிறார்.

சேலம் மேற்கு எம்.எல்.ஏ அருள்

கடந்த சில நாட்களுக்கு முன் திருவள்ளூரில் அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது என் மீது ஏதாவது கோபம் இருந்தால் அய்யா என்னை மன்னித்துவிடுங்கள். தந்தையிடம் மகன் மன்னிப்பு கேட்பது தவறில்லை என்றும் அதைத் தந்தையர் தினத்தில் தான் கேட்டுக் கொள்வதாகவும் கூறினார். 100 வருடம் மகிழ்ச்சியோடு ராமதாஸ் வாழ வேண்டும். ஐயா ராமதாஸ் மாநிலத் தலைவர் அல்ல. தேசிய தலைவர். நாட்டிலேயே மிக மூத்த அரசியல் தலைவர் ராமதாஸ் என பிரதமர் மோடி கூறினார். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இருப்பதுதான் அங்கீகரிக்கப்பட்ட கட்சி. அவர்தான் தெய்வம், அவர் சொல்படி நடப்போம். அவர் தலைமையில் நடக்கும் கூட்டம்தான் செல்லும் என சேலம் மேற்கு எம்.எல்.ஏ அருள் கூறியிருந்தார்.

நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில் சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள் சபநாயகர் அப்பாவுவை சந்திக்க தலைமைச் செயலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. நாளை சேலத்தில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், பாமக எம்.எல்.ஏ அருள் நெஞ்சுவலி ஏற்பட்டிருப்பது அக்கட்சி தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர் மத்தியில் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

ஜி.கே.மணிக்கு நெஞ்சுலி

பாமக எம்.எல்.ஏ அருளை தொடர்ந்து அக்கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி நெஞ்சுலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அடுத்தடுத்து பாமக பிரமுகர் நெஞ்சுவலியால் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.