- Home
- இந்தியா
- AIADMK: முன்னாள் அமைச்சரின் மகன் அதிமுகவில் கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்! வெளியான அதிர்ச்சி காரணம்?
AIADMK: முன்னாள் அமைச்சரின் மகன் அதிமுகவில் கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்! வெளியான அதிர்ச்சி காரணம்?
அவரது சகோதரி அளித்த புகாரின் பேரில், 17 கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் மகன் ராஜா அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இரந்த அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம். அதிமுக முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான சண்முகநாதனின் மகன் ராஜா. இவர் தூத்துக்குடி மாநகராட்சி 19வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில் எஸ்பிஎஸ் ராஜா உடன்பிறந்த அக்காவே காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவில் அவர் அளித்த புகாரில், ராஜா தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் 16 சதவீதம் பங்குகள் தருவதாக கூறினார். இதை நம்பி ஸ்ரீபெரும்புதூர் அருகே எனது கணவர் பெயரில் இருந்த இரண்டு ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து ரூ.11 கோடி பணம் பெற்று கொடுத்தோம். அந்த பணத்தை எங்களுக்கு தெரியாமலேயே அவரது மற்றொரு நிறுவனத்துக்கு மாற்றிக்கொண்டார்.
அதோடு, Golden Blue Metals Pvt. Ltd. என்ற பெயரில் கல்குவாரி தொடங்குவதாக கூறினார். அதில் முதலீடு செய்தால் அதிக பங்குகள் தருவதாக ஆசை காட்டினார். இதற்காக தன்னிடம் இருந்த 300 சவரன் நகைகளை அவரிடம் கொடுத்தேன். அதை ராஜா அடமானம் வைத்து பணம் பெற்றார். அந்த லாபத்தில் எனக்கும் என் கணவருக்கும் பங்கு கொடுக்கக் கூடாது என்பதால் எங்கள் கையெழுத்தை ராஜாவும் அவரது மனைவியும் போலியாக போட்டு எங்களுக்கு சேர வேண்டிய பங்குகளை சட்டவிரோதமாக ராஜா தனது பெயருக்கு மாற்றிக் கொண்டார். அது மட்டுமல்லாமல் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் பொறுப்பில் இருந்து நாங்கள் விலகுவதாக ஒரு கடிதத்தையும் போலியாக தயார் செய்து அதை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து என்னை இயக்குநர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு அவரது மனைவி அனுஷாவை நியமித்தார். என்னை ஏமாற்றி 17 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புகாரை தொடர்ந்து சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் ராஜா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இந்நிலையில் ராஜா எந்த நேரத்திலும் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல நேரிடும் என அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 10ம் தேதி சென்னையில் இருந்து மலேசியாவுக்குச் செல்ல ராஜா சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அங்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் ராஜாவை கைது செய்தனர்.
இந்நிலையில் மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் ராஜா அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்: தூத்துக்குடி தெற்கு மாவட்டம் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.பி.எஸ். ராஜா (தூத்துக்குடி தெற்கு பகுதி செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.