ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது. மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரி ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் மறுத்துவிட்டது. 

பாமகவில் பாமக நிறுவனர் ராமதாஸ் மகன் அன்புமணி ராமதாஸ் இடையே இடையே ஏற்பட்ட மோதல் கரணமாக இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். அதிமுக கூட்டணி அன்புமணியும், சசிகலாவுடன் ராமதாஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார். இந்நிலையில் உரிமையியல் வழக்கு முடியும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும் என ராமதாஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் கடந்த மார்ச் 26ம் தேதி தள்ளுபடி செய்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பாமக முடக்கக்கோரி வழக்கு

இந்த உத்தரவை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, கட்சி பிரச்சனை முடிந்த பிறகே சின்னத்தை ஒதுக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பு தெரிவித்தது. பாமக எங்களிடம் இருக்கும்போது சின்னத்தை முடக்க கோருவது ஏற்புடையதல்ல என அன்புமணி தரப்பு தெரிவித்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டது.

அதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று நேற்று முறையிடப்பட்டது. இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியது.

தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு

இந்நிலையில் தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் அருள் முருகன் அமர்வில் நேற்று மீண்டும் முறையீடு செய்யப்பட்டது. தங்கள் வழக்கை இன்று பிற்பகல் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் மனு எண்ணிடப்படாமல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. எண்ணிடப்பட்டால் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துவிட்டனர்.

3-வது முறையாக முறையிட்ட ராமதாஸ்

இந்நிலையில் ராமதாஸ் தரப்பில் இன்று மீண்டும் 3-வது முறையாக முறையீடு செய்யப்பட்டது. மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய மேல்முறையீட்டு மனு எண்ணிடப்பட்டுவிட்டதால், அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட தலைமை நீதிபதி அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றும் வழக்கமான பட்டியலின்படி உரிய அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.