பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வருகின்ற திங்கள் கிழமை நடைபெறவுள்ள நிலையில் கூட்டத்தில் பங்கேற்க அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உருக்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வருகின்ற 29ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. அன்புமணி தரப்பின் கடுமையான எதிர்ப்பை மீறி இக்கூட்டம் நடைபெற உள்ளதால் இக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. இதனிடையே கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பாக ராமதாஸ் வீடியோ மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
ராமதாஸ் வெளியிட்டுள்ள வீடியோவில், “சேலத்தில் நடைபெறவுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்திற்கு இன்னும் வெறும் 24 மணி நேரமே எஞ்சி உள்ளது. இந்த கூட்டம் வெறும் நிர்வாக கூட்டம் கிடையாது. இது உண்மையான பாமகவின் மறு பிறப்பு. மேலும் இது குடும்ப சண்டை கிடையாது, பதவிக்கான போரும் இல்லை. நாம் அனைவரும் சேர்ந்து உழைத்து உருவாக்கிய இயக்கத்தின் ஆன்மாவைக் காப்பாற்றும் போராட்டம்.
ஒரு காலத்தில் 20 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்த பாமக தற்போது அங்கீகாரத்தையே இழந்த நிலையில் உள்ளது. இதற்கு காரணம் உழைப்பின்மையும், பொறுப்பற்ற தலைமையும் தான். கட்சியின் தலைமை குறித்த கோரிக்கைகள் தற்போது சட்ட ஆய்வின் கீழ் உள்ளது. கட்சியின் அஸ்திவாரத்திலேயே சந்தேகம் எழும் போது கட்சி எப்படி முன்னேறும்? சேலத்தில் கூடும் பொதுக்குழு பாமகவின் புதிய அத்தியாயத்தின் தொடக்கம். சட்டமன்ற தேர்தலில் 25 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியில் பங்கு பெற வேண்டும்.
அது தான் இழந்த அங்கீகாரத்தையும், கட்சியின் சின்னத்தையும் மீட்டெடுக்கப் போகும் பயணத்தின் முதல் படி இந்த பொதுக்குழு கூட்டமாகும். இது என் கடைசி அரசியல் யுத்தமாகக் கூட இருலாம். ஆனால் எனது கடைசி மூச்சு இருக்கின்ற வரையில் இந்த இயக்கத்திற்காகவும், என் மக்களுக்காகவும் போராடுவேன். சேலம் பொதுக்குழுவில் கலநத கொண்டு உண்மையோடும், உழைப்போடும் உண்மையான பாமகவோடு நிற்க ஒவ்வொரு தொண்டரும் முன்வரவேண்டும்” என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.


