ராஜேஸ்வரி பிரியா மீதான புகார் போலி: களங்கம் கற்பிக்க முயற்சிப்பதாக விளக்கம்!
டாஸ்மாக் பார் உரிமையாளர்களிடம் பண வசூல் செய்ததாக கூறப்படும் புகார் குறித்து ராஜேஸ்வரி பிரியா விளக்கம் அளித்துள்ளார்
சென்னை அருகே நீலாங்கரையில் வசிப்பவர் ராஜேஷ்வரி பிரியா. பாமக மகளிரணியில் பொறுப்பில் இருந்த ராஜேஷ்வரி பிரியா, அக்கட்சியில் இருந்து விலகி அனைத்து மக்கள் அரசியல் கட்சி என்ற பெயரில் தனிக்கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். அக்கட்சியின் தலைவராக இருக்கும் ராஜேஸ்வரி பிரியா, டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். சட்டவிரோத பார்களுக்கு எதிராகவும் அவர் குரல் கொடுத்து வருகிறார்.
இதனிடையே, கிழக்கு கடற்கரை சாலையில் பார் உரிமையாளர் ஒருவருடன் கூட்டு சேர்ந்து, முன்னாள் அமைச்சர் ஆட்களுடன் சேர்ந்து கொண்டு மற்ற பார் உரிமையாளர்களை மிரட்டி பணம் வசூலிக்கும் செயல்களில் ராஜேஷ்வரி பிரியா ஈடுபட்டு வந்ததாகவும், இதுகுறித்து நீலாங்கரை காவல் நிலையத்தில் டாஸ்மாக் மேலாளர் புகார் அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், அந்த தகவல் போலியானது என தெரியவந்துள்ளது. அதுபோன்ற ஒரு புகார் காவல்நிலையத்தில் பதிவாகவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ராஜேஸ்வரி பிரியா, தன் மீது களங்கம் கற்பிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டுகிறார்.
ராஜினாமா முடிவை கைவிட்டது ஏன்? மனம் திறந்த மணிப்பூர் முதல்வர் பைரன் சிங்!
இதுதொடர்பாக, ராஜேஷ்வரி பிரியாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, “லியோ படத்தில் விஜய் பாடிய நா ரெடி பாடலுக்கு எதிராக குரல் கொடுத்து வருவதால் விஜய் ரசிகர்களும், டாஸ்மாக் கடைகள் மற்றும் சட்டவிரோத பார்களுக்கு எதிராக நான் குரல் கொடுத்து வருவதால், பார் உரிமையாளர்கள் சிலரும் வேண்டும் என்றே என் மீது களங்கம் கற்பிக்க முயற்சித்து இதுபோன்ற அவதூறுகளை பரப்பி வருகின்றனர்” என விளக்கம் அளித்துள்ளார்.
இத்தகைய அச்சுறுத்தல்களுக்கும், அவதூறுகளுக்கும் நான் அஞ்ச மாட்டேன் என கூறும் ராஜேஸ்வரி பிரியா, டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான தன்னுடைய போராட்டம் தொடரும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.