ராஜினாமா முடிவை கைவிட்டது ஏன்? மனம் திறந்த மணிப்பூர் முதல்வர் பைரன் சிங்!
ராஜினாமா முடிவு எடுத்தது குறித்து மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் விளக்கம் அளித்துள்ளார்
மணிப்பூரில் இரு மாதங்களாக மோதல்கள் நீடித்து வரும் நிலையில், முதல்வர் பைரன் சிங், தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக நேற்று முன் தினம் தகவல்கள் வெளியாகியது. இரண்டு மாதங்களாகியும் மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தத் தவறியதால், முதல்வர் பைரன் சிங் ராஜினாமா செய்யவுள்ளதாக கூறப்பட்டது. அதேசமயம் அவர் ராஜினாமா செய்யக் கூடாது என்ற கோரிக்கைகளும் அம்மாநிலத்தில் வலுத்தன.
இதையடுத்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் தெரிவித்தார். “இந்த முக்கியமான தருணத்தில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.” என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், ராஜினாமா முடிவும், அதனையடுத்து அந்த முடிவை கைவிட்டது குறித்தும் மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான போராட்டங்களால் மிகவும் வேதனையடைந்ததாகவும், மாநில மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக உணர்ந்ததாலும் ராஜினாமா முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
ம.பி. பழங்குடி கிராமத்திற்குச் சென்று மக்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்த பிரதமர் மோடி
“ஆனால், என் வீட்டிற்கு வெளியே மக்கள் கூடியிருப்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. எல்லோரும் என்னை விட்டு போய்விட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால் நான் வெளியே சென்று கூட்டத்தைப் பார்த்தபோது, கடவுளுக்கும் என்னை மிகவும் நேசிக்கும் என் மக்களுக்கும் நன்றி சொன்னேன். அதனால் என் முடிவை மாற்றிக் கொண்டேன்.” என்றும் மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் தெரிவித்துள்ளார்.
இப்படிப்பட்ட இக்கட்டான நேரத்தில் சிலர் நமது தலைவர்களின் உருவபொம்மையை எரிக்க ஆரம்பித்தனர். அது எனது உருவ பொம்மையாக இருந்தால் நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன். ஆனால், பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்தனர். சில பகுதிகளில் பாஜக அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தினர் என்றும் பைரன் சிங் தெரிவித்துள்ளார்.
“நான் உண்மையில் காயப்பட்டேன். நான் ஏதாவது தவறு செய்துவிட்டேனா என்று என்னை நானே கேட்க ஆரம்பித்தேன். இதுபோன்று மோதல்கள் நடக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எனவே, அதற்கு நாங்கள் தயராக இல்லை. எங்களால் முடிந்ததை நாங்கள் செய்கிறோம். குக்கி சமூக சகோதரர்கள் என்னை அவமதித்து வருகின்றனர்.” என்றும் மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற காரணங்களால் நம்பிக்கையை இழந்து விட்டதாக தெரிவித்த அவர், பின்னர் மக்கள் தன்னுடன் இருப்பதை கண்டு ராஜினாமா முடிவை கைவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.