மத்திய ரயில்வே துறையில் துணை மருத்துவப் பணியாளர்களுக்கான 434 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நர்சிங் கண்காணிப்பாளர், மருந்தாளுநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே துறையில் பணியில் எப்படியாவது சேர்ந்து விட வேண்டும் என்பது நாடு முழுவதும் உள்ள படித்த இளைஞர்களின் கனவாக இருந்து வருகிறது. ரயில்வே துறைகளில் அவ்வப்போது காலி பணியிடங்களை ஆர்.ஆர்.பி எனப்படும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பாராமெடிக்கல் எனப்படும் துணை மருத்துவ பணியாளர்களில் உள்ள காலிப்பணியிடங்களை ஆர்.ஆர்.பி வெளியிட்டுள்ளது.

பணியிடங்களின் விவரம்

நர்சிங் கண்காணிப்பாளர் - 272, மருந்தாளுநர் (பார்மசிஸ்ட்) - 105, மலேரியா இன்ஸ்பெக்டர் - 33, ஆய்வக உதவியாளர் - 12, எக்ஸ்ரே டெக்னீசியன் - 4, ஈ.சி.ஜி., டெக்னீசியன்- 4, டயாலசிஸ்ட் டெக்னீசியன் - 4 என மொத்தம் 434 இடங்கள் உள்ளன.

சம்பளம் விவரம்

நர்சிங் கண்காணிப்பாளர் - ரூ.44,900, டயாலிசிஸ் டெக்னிஷியன் - ரூ.35,400, சுகாதாரம் மற்றும் மலேரியா ஆய்வாளர் கிரேடு III - ரூ.35,400, மருந்தாளர் - ரூ.29,200, ரேடியோகிராஃபர் எக்ஸ்-ரே தொழில்நுட்ப வல்லுநர் - ரூ.29,200, ஈசிஜி டெக்னிஷியன் - ரூ.25,500, ஆய்வக உதவியாளர் கிரேடு II - ரூ.21,700.

கல்வித் தகுதி

பணிக்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடும். அதாவது நர்சிங் கண்காணிப்பாளர் பணிக்கு பொது நர்சிங் உள்ளிட்ட படிப்புகளை முடித்து இருக்க வேண்டும். டயாலிசிஸ் டெக்னீஷியன் பணிக்கு பிஎஸ்சி ( Diploma in Haemodialysis) உள்ளிட்டவற்றுடன் அனுபவம் இருக்க வேண்டும். மருந்தாளுநர் பணிக்கு 10 மற்றும் 12 வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவுடன் அதற்கு இணையான டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். அல்லது பி.பார்ம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

நர்சிங் கண்காணிப்பாளர் பணிக்கு 20 வயது முதல் 43 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதர பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 36 ஆகும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் சலுகைகள் அளிக்கப்படும்.

தேர்வு செய்யும் முறை

கணினி வழி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி , உள்ளிட்ட பிரிவினருக்க்கு ரூ.250 செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பிறகு இந்த தொகை திருப்பி அளிக்கப்படும். பொது பிரிவினருக்கு ரூ.400 திருப்பி அளிக்கப்படும். செப்டம்பர் 08ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.