தன்னுடைய பள்ளி நாட்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, ''பள்ளியில் படிக்கும்போது நான் சுட்டிப்பையன். என்னை சமாளிக்க ஆசிரியர்கள் படாதபாடு பட்டனர்'' என்று கூறியபோது அங்கிருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று (ஜனவரி 13) நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தனியார் பள்ளியின் 50வது ஆண்டு விழாவில் பங்கேற்றார். முன்னதாக மதசார்பற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்ற ராகுல் காந்தி, பின்பு ஆண்டு விழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றினார்.
தகவல் தொழில்நுட்பப் புரட்சி
அப்போது அவர் செயற்கை நுண்ணறிவு யுகத்தில் தகவல்களை அறிவாகவும் ஞானமாகவும் மாற்ற வேண்டும் என்று பள்ளிகளைக் கேட்டுக்கொண்டார். ''தகவல் தொழில்நுட்பப் புரட்சி, செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுகள் பற்றி நாம் தினமும் கேட்கிறோம், இது தகவல்கள் தாராளமாகக் கிடைக்கும் தகவல் யுகம். ஆனால், இது போன்ற ஒரு பள்ளியின் வேலை, தகவல்களைப் பார்த்து, அதை அறிவாக மாற்றி, மிக முக்கியமாக, ஞானத்துடன் நடந்துகொள்ளக்கூடிய நபர்களை உருவாக்குவதே ஆகும்.
தகவல் யுகத்தில், நமக்கு ஞானம் இல்லாமல், தகவல்களால் மட்டும் ஈர்க்கப்பட்டால், உலகம் மிகவும் விரும்பத்தகாத இடமாக மாறிவிடும். எனவே, இது போன்ற பள்ளிகளுக்கு மிக முக்கியப் பங்கு உள்ளது, ஏனெனில் அவை இளம் மாணவர்களை ஞானமுள்ள குடிமக்களாக மாற்றுகின்றன'' என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
அரசியல்வாதிக்கு தேவை பணிவு
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, ''நான் இங்குள்ள மாணவர்களிடம் கேட்டபோது, அவர்கள் மருத்துவர்களாகவோ அல்லது விமானப்படையில் விமானிகளாகவோ ஆக விரும்புவதாகக் கூறினர். ஆனால் யாரும் அரசியல்வாதி ஆக விரும்புகிறோம் என்று சொல்லவில்லை. எனது 20 வருட அரசியல் வாழ்க்கையில், ஒரு அரசியல்வாதி, மாணவர் அல்லது ஆசிரியருக்கு மிக முக்கியமான தேவை பணிவுதான்'' என்றார்.
மற்றவர்களின் மதம், மொழியை மதியுங்கள்
மேலும் பேசிய ராகுல் காந்தி, ''மற்றவர்கள் மொழியை, மதத்தை மதித்து நடக்க வேண்டும். மக்கள் ஒருவருக்கொருவர் அன்பாக இருக்கும், ஒருவருக்கொருவர் செவிசாய்க்கும், ஒருவருக்கொருவர் மொழி, கலாச்சாரம் மற்றும் மதத்தை மதிக்கும் ஒரு இந்தியாவை உருவாக்க நான் உதவ விரும்புகிறேன்'' என்று கூறினார். இதன்பிறகு மாணவர்களிடம் கலந்துரையாடிய ராகுல் காந்தி, ''நமது நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் பாதுகாக்கபட வேண்டும். கல்வி தனியார்மயம் ஆகக்கூடாது'' என்று வலியுறுத்தினார்.
பள்ளியில் நான் சுட்டிப்பையன்
அப்போது தன்னுடைய பள்ளி நாட்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, ''பள்ளியில் படிக்கும்போது நான் சுட்டிப்பையன். என்னை சமாளிக்க ஆசிரியர்கள் படாதபாடு பட்டனர்'' என்று கூறியபோது அங்கிருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


