- Home
- Tamil Nadu News
- விஜய்க்கு சப்போர்ட் பண்ண கையோடு தமிழகத்தில் கால் பதித்த ராகுல் காந்தி.. காங்கிரஸார் உற்சாகம்!
விஜய்க்கு சப்போர்ட் பண்ண கையோடு தமிழகத்தில் கால் பதித்த ராகுல் காந்தி.. காங்கிரஸார் உற்சாகம்!
ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சர்டிபிகேட் வழங்காததற்கு கண்டனம் தெரிவித்திருந்த ராகுல் காந்தி, விஜய்க்கு ஆதரவளித்த உடனே தமிழகம் வந்துள்ளார். இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராகுல் காந்தி தமிழகம் வருகை
காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று (ஜனவரி 13) தமிழகம் வந்துள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு வந்த ராகுல் காந்தி அங்குள்ள தனியார் பள்ளியில் நடந்த மதசார்பற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்றார். தொடர்ந்து தனியார் பள்ளியின் 50வது ஆண்டு விழாவில் அவர் பங்கேற்க உள்ளார்.
செல்வபெருந்தகை, ஆ.ராசா வரவேற்பு
முன்னதாக ராகுல் காந்தி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கர்நாடக மாநிலம் மைசூரு வந்தார். பின்பு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கூடலூர் வந்தார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, திமுக துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா, காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர். மேலும் கேரள எல்லை என்பதால் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ்காரர்களும் ராகுல் காந்தியை வரவேற்றனர்.
அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை
ராகுல் காந்தி தனியார் பள்ளிக்கு வந்தவுடன் பாரம்பரிய நீலகிரி மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனத்துடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கூடலூரில் தனியார் பள்ளி விழாவில் மட்டும் பங்கேற்கும் ராகுல் காந்தி, விழா முடிந்ததும் மைசூருக்கு ஹெலிகாப்டாரில் சென்று அங்கிருந்து டெல்லி திரும்புகிறார். அவர் எந்த ஒரு அரசியல் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்க்கு ஆதரவாக பேசியிருந்த ராகுல் காஃந்தி
நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் சென்சார் சான்றிதழ் வழங்காததால் அந்த படம் வெளியாகவில்லை. விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ்காரர்கள் குரல் கொடுத்த நிலையில், ராகுல் காந்தியும் இன்று விஜய்க்கு ஆதரவாக பேசியிருந்தார்.
'''ஜனநாயகன்' திரைப்படத்தைத் தடுக்கும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் முயற்சி, தமிழ் கலாசாரத்தின் மீதான ஒரு தாக்குதலாகும். தமிழ் மக்களின் குரலை அடக்குவதில் நீங்கள் ஒருபோதும் வெற்றி பெற மாட்டீர்கள் மோடி'' என்று ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

