- Home
- Tamil Nadu News
- விஜய் மீது பாச மழை பொழியும் காங்கிரஸ்.. தவெக சொன்ன 'அந்த' ஒரு வார்த்தை.. கதர் சட்டையினர் குஷி!
விஜய் மீது பாச மழை பொழியும் காங்கிரஸ்.. தவெக சொன்ன 'அந்த' ஒரு வார்த்தை.. கதர் சட்டையினர் குஷி!
'எங்கள் கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும்' என தவெக தொடர்ந்து கூறி வருகிறது. இதனால் விஜய்யுடன் கைகோர்க்கவே ஜனநாயகனுக்கு ஆதரவாக காங்கிரஸ் பேசி வருவதாக கூறப்படுகிறது.

ஜனநாயகனுக்கு சிக்கல்
நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் மத்திய தணிக்கை வாரியம் சென்சார் சர்டிபிகேட் வழங்காததால் பொங்கலுக்கு வெளியாகாமல் முடங்கி கிடக்கிறது. படத்தில் சர்ச்சை காட்சிகள் இருப்பதாக கூறி தணிக்கை வாரியம் சென்சார் சர்டிபிகேட் வழங்க மறுக்கிறது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் பொங்கல் தினம் அன்று விசாரிக்கப்பட உள்ளது.
விஜய் மீது காங்கிரஸ் பாச மழை
ஜனநாயகன் முடக்கத்துக்கு விஜய்க்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்தனர். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியில் அனைவரும் விஜய்க்கு ஆதரவாக மத்திய பாஜக அரசுக்கு கண்டனத்தை பதிவு செய்தனர். காங்கிரசை சேர்ந்த ஜோதிமணி, விஜய்வசந்த், மாணிக்கர் தாகூர் என அனைத்து எம்.பி.க்களும் விஜய் மீது பாச மழை பொழிந்தனர்.
ராகுல் காந்தியும் ஆதரவு
இன்று தமிழகம் வரும் காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தியும், ''தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் 'ஜனநாயகன்' திரைப்படத்தைத் தடுக்கும் முயற்சி, தமிழ் கலாசாரத்தின் மீதான ஒரு தாக்குதலாகும். தமிழ் மக்களின் குரலை அடக்குவதில் நீங்கள் ஒருபோதும் வெற்றி பெற மாட்டீர்கள் மோடி'' என்று கூறி விட்டார்.
விஜய்ய்யுடன் கூட்டணியா?
திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும். தொகுதிகளை கிள்ளிக் கொடுக்கக் கூடாது அள்ளிக்கொடுக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே கூற ஆரம்பித்து விட்டது. விஜய்யின் தவெக 'எங்கள் கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும்' என தொடர்ந்து கூறி வருகிறது. இதனால் விஜய்யுடன் கைகோர்க்கவே ஜனநாயகனுக்கு ஆதரவாக காங்கிரஸ் பேசி வருவதாக கூறப்படுகிறது.
தவெக சொன்ன குட்நியூஸ்
இந்த நிலையில், தவெகவின் தலைமை நிலையச் செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான சி.டி.நிர்மல்குமார் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், 'ஜனநாயகனுக்கு ஆதரவாக காங்கிரஸ் குரல் கொடுக்கிறது. தவெக கூட்டணியில் இணைய போகிறதா?' என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த நிர்மல்குமார், ''எங்கள் கூட்டணி நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை'' என்று தெரிவித்தார்.
கதர் சட்டையினர் குஷி
அதாவது ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று சொல்லி தான் பாஜகவை தவிர மற்ற கட்சிகளுக்கு தவெக வலைவீசி வருகிறது. இதனை உறுதிப்படுத்தியுள்ள சி.டி.நிர்மல்குமார், காங்கிரஸ் வந்தால் ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு கிடைக்கும் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார். இதனால் காங்கிரஸ்காரர்கள் குஷியடைந்துள்ளனர். ஆனால் காங்கிரஸ் தலைமை திமுகவை கழட்டி விட்டு விஜய்யுடன் கைகோர்க்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

