இனி பத்திரிகையாளர்களையே சந்திக்க மாட்டேன் என்று தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். அவர் ஏன் இப்படி கூறினார்? என பார்ப்போம்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன், தேமுதிக கூட்டணி வைத்த நிலையில், மாநிலங்களவை சீட்டை தருவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்ததாக கூறப்படுகிறது. ''தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுப்பது அதிமுகவின் கடமை ஆகும். எடப்பாடி பழனிசாமி எங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும்'' என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்தார்.
தேமுதிகவை ஏமாற்றினாரா எடப்பாடி பழனிசாமி?
இது தொடர்பாக தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷீம் நேரடியாக எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வலியுறுத்தி இருந்தார். ஆனால் இந்த கோரிக்கையை நிராகரித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை சேர்ந்த 2 பேருக்கே மாநிலங்களவை சீட்டை கொடுத்ததால் தேமுதிக அதிருப்தியில் ஆழ்ந்தது. இதனால் 2026 சட்டபேரவை தேர்தலில் தேமுதிக திமுக கூட்டணிக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. ''அதிமுக மாநிலங்களவை சீட் கொடுக்கவில்லை. பின்னர் பார்த்துக் கொள்ளலாம்; பொறுத்தவர்கள் பூமி ஆள்வார்கள், நாங்கள் பதற்றமின்றி தெளிவாக உள்ளோம்'' என்று பிரேமலதா கூறினார்.
எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்தி விட்டார்
கடலூரில் நடைபெறும் மாநாட்டில் எங்கள் கூட்டணி குறித்து அறிவிப்போம் எனவும் பிரேமலதா தொடர்ந்து கூறி வருகிறார். இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்தி விட்டார் என்று பிரேமலதா பேசியதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இதனால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்தி விட்டார் என்று தான் சொல்லவே இல்லை என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர்களுக்கு பிரேமலதா கண்டனம்
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்தி விட்டார் என்று நான் பேசவில்லை. நான் சொல்லாத ஒன்று அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வந்துள்ளன. நான் அப்படி பேசவே இல்லை. இவை அனைத்தும் முற்றிலும் தவறான செய்தி. என் வாயில் இருந்து அந்த வார்த்தை வரவே வராது. எங்கள் கட்சி நிர்வாகிகளுக்குள் பேசுவதை நான் பேசியதாக பத்திரிகையாளர்கள் போடுவது கடும் கண்டனத்துக்குரியது.
பத்திரிகையாளர்களை சந்திக்க மாட்டேன்
தேமுதிக சார்பில் இதை வன்மையாக கண்டிக்கிறேன். நான் சொல்லாததை சொல்வதாக நீங்கள் வெளியிட்டால் இனி பத்திரிகையாளர்களை சந்திக்க மாட்டேன். நான் பலமுறை எங்கள் கூட்டணி குறித்து தெளிவாக கூறிவிட்டேன். கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணியை பற்றி அறிவிப்பேன். இதில் எந்த மாற்றமும் இல்லை. “உள்ளம் தேடி இல்ல நாடி” முதல் சுற்றுப்பயணத்துக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்தனர்'' என்றார்.
