தொடரும் கன மழை.! பூண்டி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!
தொடர் கனமழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், அதன் முழு கொள்ளளவை எட்டும் நிலையில், 1000கன அடி உபரி நீர் இன்று மாலை வெளியேற்றப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடரும் கன மழை
தமிழகத்தில் இரவு நேரத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக நீர் பிடிப்பு பகுதிகளில் நீரின் அளவானது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஆந்திரா- தமிழக பகுதியிலும் கன மழை காரணமாக வாணியம்பாடி பகுதியில் உள்ள பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே போல திருவள்ளூர் மாவட்டம் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக பூண்டி அணையில் நீரின் வரத்து அதிகரித்துள்ளது.
35 அடி உள்ள பூண்டி அணை தற்போது 34.5 அடி என்ற நீர்மட்டத்தை எட்டியுள்ளது. இதனையடுத்து சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கிய நீர் தேக்கமான பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று மாலை 4 மணியளவில் 1000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
பூண்டி அணையில் இருந்து நீர் திறப்பு
இதன் காரணமாக தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. பூண்டி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கொசஸ்தலை ஆறு வழியாக கடலில் சென்று சேரவுள்ளது. இதனால் இந்த வழிப்பாதையில் உள்ள 63 கிராம மக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றின் கரையோரங்களில் நின்று செல்பி எடுக்கவோ.? ஆற்று தண்ணீரை பார்க்கவோ கரையோரங்களுக்கு பொதுமக்கள் வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
நிரம்பும் தருவாயில் தேனி மாவட்ட அணைகள்; விவசாயிகள் மகிழ்ச்சி