பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மே 13ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : தமிழகத்தை மட்டுமல்ல நாட்டையே அதிர வைத்த பாலியல் வழக்கு தான் பொள்ளாச்சி பாலியல் சம்பவம், அண்ணா அடிக்காதீங்க.. கழட்டிடுறேன் என இளம்பெண்ணின் கண்ணீரோடு வெளியான வீடியோவால் தமிழகமே அதிர்ந்தது. இந்த வழக்கில் பல பெண்கள் பாதிக்கப்பட்டதாலும், 100க்கும் மேற்பட்ட வீடியோக்கள் சிக்கியதாலும் இந்த வழக்கு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் அரசியலிலும் எதிரொலித்தது. அப்போது ஆளுங்கட்சியாக இருந்த சீனியர்களின் உறவினர்கள் தான் குற்றவாளிகள் என கூறப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் கோவை மாவட்ட காவல் துறையில் புகாரளித்த நிலையில் கோவை மாவட்டக் காவல்துறையினர் முதலில் விசாரித்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பொள்ளாச்சி பாலியல் வழக்கு - சிபிஐ விசாரணை

இதனையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு, பின்னர் சி.பிஐ-க்கு மாற்றம் செய்யப்பட்டது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (வயது25) முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். அடுத்ததாக சபரிராஜன்(25), வசந்தகுமார்(27), மணிவண்ணன்(25) சதீஷ் (28) ஆகியோர் கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் போலீசாரின் விசாரணையில் கடந்த 2021-ம் ஆண்டு ஹேரேன் பால்(29), அருளானந்தம்(34), அருண்குமார் (30) பாபு என்ற பைக் பாபு(34),என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஆதாரங்கள்

இந்த வழக்கு விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் 50- க்கும் மேற்பட்ட சாட்சியங்கள், 40 மின்னணு தரவுகள், சுமார் 200 ஆவணங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு விசாரணையில்சேர்க்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சுமார் 6 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

தீர்ப்புக்கு தேதி குறித்த நீதிபதி

இரு தரப்புக்குமான விசாரணை நிறைவடைந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13-ம் தேதி (நாளை) தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார்.எனவே நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நாளை முக்கிய தீர்ப்பு வெளியாகவுள்ளதால் மீண்டும் அனைவரின் பார்வை கோவை நீதிமன்றம் மீது திரும்பியுள்ளது. 

தற்போது சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் நீதிமன்ற தீர்ப்புக்காக கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரும் குற்றவாளிகளா.? அல்லது நிரபராதிகளா.? என தீர்ப்பு அளிக்கப்படும் எனவும், இதனை தொடர்ந்து மதியம் என்ன தண்டனை என நீதிபதி அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.