திமுக இளைஞர் அணி மாநாட்டிற்கு இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து!
திமுக இளைஞர் அணி மாநாட்டிற்கு இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்
திமுக இளைஞர் அணியின் 2ஆவது மாநில மாநாடு சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன் பாளையத்தில் இன்று கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டை, கழக கொடியை ஏற்றிவைத்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த நிலையில், திமுக இளைஞர் அணி மாநாட்டிற்கு இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன்படி, மாநில உரிமைகளை மீட்கும் திமுக இளைஞரணி மாநாட்டுக்கு வாழ்த்துக்கள் என காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கான அரசியல் உரிமைகளை பாஜக பறிப்பதாக குற்றம் சாட்டியுள்ள அவர், குடிமக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கான திமுகவின் இந்த மாநாடு சரியான நேரடித்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சமூக நீதி, கூட்டாச்சி தத்துவத்தின் முன்னோடியாக திமுக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் கீழ், பல லட்சம் இளைஞர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குவதாக புகழாரம் சூடியுள்ள அவர், வரலாற்று நிகழ்வான திமுக இளைஞரணி மாநாடு வெற்றி பெற தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
திமுகவின் இளைஞரணி மாநாடு, நமது அரசியலமைப்பின் கரங்களை மேலும் வலுப்படுத்தும் என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கூட்டாட்சி தத்துவம், மத்திய-மாநில உறவுகளின் முக்கியத்துவத்தை வெளிச்சம் போட்டு காட்டும் கருப்பொருளான மாநில உரிமைகளை காக்கும் திமுகவின் இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடுக்கு வாழ்த்துக்கள் என தெவித்துள்ளார்.
இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு மோசமடைந்து வரும் காலத்தில் நாம் இருப்பதாக தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய மாநில உறவுகளை வலுப்படுத்தும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தை மாநாட்டின் மூலம் திமுக இளைஞரணி எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
BREAKING இந்தியாவில் இருந்து மாஸ்கோ சென்ற பயணிகள் விமானம் ஆப்கனில் விபத்து!
நாட்டின் இன்றைய சூழலில் முன்னெப்போதையும் விட முக்கியமானதாக இருக்கும் மாநில உரிமைகளை மீட்கும் மாநாட்டின் கருப்பொருளை வரவேற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக இளைஞரணி மாநில மாநாடு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதேபோல், கர்நாடக முதல்வர் சித்தராமையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சுரி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இந்திய கம்யூனிஸ்ட் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட பலரும் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.