கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை சுட்டு பிடித்தது தொடர்பாக மாவட்ட காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
கோவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் விமான நிலைய பின்புரத்தில் ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை மதுபோதையில் வந்த 3 போதை இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் திங்கள் கிழமை இரவு 10.30 மணியளவில் சுட்டு பிடிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக கோவை காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கம் அளித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “குற்றச்செயலில் ஈடுபட்ட மூவரில் சதீஷ், காளீஸ்வரன் ஆகிய இருவரும் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியைச் சேர்ந்தவர்கள். இருவரும் சகோதரர்கள் என்ற நிலையில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது உறவினரான தவசி மதுரை கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்தவர். இவரும் இணைந்து தான் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.
குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் குற்றவாளிகள் துடியலூர் அருகே பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை கைது செய்ய முற்பட்ட போது தலைமை காவலர் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் பின்னர் தான் காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி குற்றவாளிகளை பிடித்தனர்.
குற்றவாளிகளை பிடிக்க சுமார் 300 சிசிடிவி காட்சிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. தற்போது பாதிக்கப்பட்ட நபர்கள் சீரான உடல் நிலையுடன் உள்ளனர். அவர்களுக்கு மனநிலை ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் குற்றவாளிகளும் சீரான உடல்நிலையுடன் உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
