பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையேயான மோதல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில், கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா நீக்கப்பட்டுள்ளார். 

ராமதாஸ் - அன்புமணி இடையை மோதல்

பாமக நிறுவனர் ராமதாஸ் - அன்புமணி இடையை மோதல் உச்சமடைந்துள்ளது. நேற்று விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் முன்வைத்தார்.

அன்புமணி ராமதாஸ் ஆலோசனை

இந்நிலையில் ராமதாஸின் கடுமையான விமர்சனங்களை அடுத்து சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் திருமண மண்டபம் ஒன்றில் பாமகவின் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகளுடன் 3 நாட்கள் ஆலோசனைக் கூட்டம் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்று வருகிறது. ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட 23 மாவட்டச் செயலாளர்களில் 22 மாவட்டச் செயலாளர்கள் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாமகவின் மாநில பொருளாளர் திலகபாமா பங்கேற்றிருந்தார்.

திலகபாமா கட்சியில் இருந்து நீக்கம்

இந்நிலையில் பாமகவின் மாநில பொருளாளர் திலகபாமா கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். திலகபாமாவுக்கு பதிலாக திருப்பூர் சையத் மன்சூர் மாநில பொருளாளராக நியமனம் செய்யப்படுவதாக ராமதாஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அன்புமணிக்கு ஆதரவாக இருந்த திலகபாமா

பாமக தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்த போது அக்கட்சியின் பொருளாளர் திலகபாமா கடும் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல் பாட்டாளி மக்கள் கட்சியின் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது. இதுவரை டாக்டர் ராமதாஸ் எடுத்த அனைத்து முடிவுகளும் சரியானதுதான். டாக்டர் ராமதாஸ் காட்டிய அன்பை ருசித்தவள் நான். ஆனால் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து டாக்டர் ராமதாஸ் நீக்கியதை எங்களாள் ஏற்க முடியாது என தெரிவித்திருந்தார். மேலும் அன்புமணியின் முடிவுக்காக காத்திருக்கிறேன். தனி நபர்களை விட தலைமை பெரியது. தலைமையை விட இயக்கம் பெரியது. இயக்கத்தை விட சமூகம் பெரியது என திலகபாமா கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.