ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் அண்ணன் முருகேசன், நிலத்தை எழுதிக்கொடுக்க மறுத்ததால் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக எம்எல்ஏ
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருப்பவர் சண்முகையா. இவரது அண்ணன் அயிரவன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன்(61). தொழிலதிபரான இவர் அதிமுகவை சேர்ந்தவர். இவர் ஓட்டப்பிடாரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றாலைகளுக்கு இடம் எடுத்து கொடுப்பது மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறாா்.
நிலத்தை எழுதிக்கொடுக்குமாறு கொலை மிரட்டல்
இந்நிலையில் மாரிமுத்து அவரது மனைவி முத்து மாடத்தி பெயரிலிருக்கும் சிலோன்காலனி பகுதியில் உள்ள நிலத்தை தன்னிடம் தருமாறு முருகேசன் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்துள்ளார். இந்நிலையில், மாரிமுத்து, அவரது மனைவி முத்து மாடத்தி ஆகியோர் நேற்று திருச்செந்துார் கோவிலுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது முத்தையாபுரம் மதிகெட்டான்ஓடை பாலத்தின் வந்துக்கொண்டிருந்த போது காரில் வந்த முருகேசன் அவர்களை வழிமறித்து நிலத்தை தன் பெயருக்கு எழுதி தருமாறு கொலை மிரட்டல் விடுத்தார். அதமட்டுமல்லாமல் அவர்களது செல்போனை பறித்து உடைத்ததாகவும் கூறப்படுகிறது.
5 பிரிவுகளின் கீழ் வழக்கு
இதுகுறித்து மாடத்தி முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து அவரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் அயிரவன்பட்டி முருகேசன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதனையடுத்து அவரை மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிறையில் அடைத்தனர். ஆளும் திமுக எம்எல்ஏவின் அண்ணன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
