திமுகவின் கோரமுகம் அம்பலமாகிவிட்டது; திமுகவை வன்னியர் சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது - ராமதாஸ் ஆவேசம்
தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே தமிழகத்தில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியும் என்ற முதல்வர் ஸ்டாலினின் கருத்துக்கு பாமக நிறுவனர் இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் மட்டும் தான் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று மனதளவில் உறுதி ஏற்றுக்கொண்டு, அதற்கு சாக்கு சொல்வதற்காக மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுபோடுவது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், சட்டத்துறை அமைச்சர் இரகுபதி அவர்களும்,‘‘தேசிய அளவில் மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்தினால் மட்டும் தான் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 10.50% இடஒதுக்கீடு வழங்க முடியும்’’ என்று கூறியிருக்கிறார். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிவிடக் கூடாது என்பதற்காக இந்த வாதத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் இரகுபதியும் எங்கிருந்து கண்டுபிடித்தார்கள் என்பது தான் தெரியவில்லை.
வன்னியர்கள் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் 31.03.2022&ஆம் நாள் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், எந்த இடத்திலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி தான் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எந்த இடத்திலும் கூறவில்லை. மாறாக, ‘‘நிகழ்காலத்திற்கான, தகுந்த புள்ளிவிவரங்களைத் திரட்டி உள் இடஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை’’ என்று தான் கூறியுள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பு இந்த அளவுக்கு தெளிவாக இருக்கும் நிலையில், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி தான், அதிலும் குறிப்பாக மத்திய அரசால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் தான் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்று முதலமைச்சரும், சட்ட அமைச்சரும் கூறுவது மிகவும் வியப்பாக உள்ளது. அவர்களின் புரிதல் மிகவும் தவறானதாகும்.
கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பணத்தை வைத்து திமுக வாயை அடைத்துள்ளது - பிரேமலதா ஆக்ரோஷம்
தமிழ்நாட்டில் இதுவரை வழங்கப்பட்ட எந்த இட ஒதுக்கீடும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி வழங்கப்படவில்லை. தேசிய அளவிலான இட ஒதுக்கீடுகளும் வழங்கப்படவில்லை. மாறாக, இட ஒதுக்கீடு கோரும் சமூகங்களின் பின்தங்கிய நிலையின் அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு வழங்கப் பட்டிருக்கிறது. வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடும் அவர்களின் பின்தங்கிய நிலையின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்பது தான் உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஆகும். தமிழக அரசின் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றிலும், பல்வேறு வாழ்நிலைக் குறியீடுகளிலும் வன்னியர்கள் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ளனர் என்பதற்கு ஏராளமான தரவுகள் உள்ளன. அரசு நினைத்திருந்தால் அவற்றின் அடிப்படையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியான சில மாதங்களில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியிருக்க முடியும். ஆனால், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் எண்ணம் திமுக அரசுக்கு இல்லை என்பதால் தான், வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக பல தரவுகள் இருந்தும் கூட, வன்னியர்களுக்கு சமூக நீதி வழங்க மறுக்கிறது. அதற்காக அரசு கண்டுபிடித்துள்ள புதிய காரணம் தான் சாதிவாரி கணக்கெடுப்பு.
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை கடந்த 2022&ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருத்தியமைத்த தமிழக அரசு, வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்கும்படி ஆணையத்தைக் கேட்டுக் கொண்டு ஓர் அரசாணையை பிறப்பித்தது. அதில் எந்த இடத்திலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி தான் வன்னியர் உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கூறப்படவில்லை. அதுமட்டுமின்றி, வன்னியர் இட ஒதுக்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் 68, 73 ஆகிய பத்திகளின் அடிப்படையில் தான் வன்னியர்களின் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க வேண்டும் என்று பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தமிழக அரசு ஆணையிட்டது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் குறிப்பிட்ட அந்த பத்திகளில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கூறப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது, திடீரென சாதிவாரி கணக்கெடுப்பு என்ற தேவை அரசுக்கு எங்கிருந்து எழுந்தது?
தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 10 ஆண்டுகளுக்கு மேல் எனது தலைமையில் நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து 1989&ஆம் ஆண்டில் வன்னியர்கள் உள்ளிட்ட 108 சாதிகளுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கினார். அதற்கு எந்த சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட வில்லை. கலைஞர் வழங்கிய அந்த இட ஒதுக்கீட்டை அனைத்து நீதிமன்றங்களும் ஏற்றுக்கொண்டன. பின்னாளில் இஸ்லாமியர்கள், அருந்ததியர்கள் இட ஒதுக்கீடும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாமல் தான் வழங்கப்பட்டன. அப்போதெல்லாம் சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் உள் இட ஒதுக்கீடு வழங்கிய திமுக, இப்போது வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மட்டும் சாதிவாரி கணக்கெடுப்பு, அதுவும் தேசிய அளவில் நடத்தப்பட வேண்டும் என்பது முழுக்க முழுக்க ஏமாற்று வேலை; இது வன்னிய மக்களுக்கு மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு இழைக்கும் பெருந்துரோகம் ஆகும்.
மனு கொடுத்துவிட்டால் ஆளுநர் ஆட்சியை கலைத்துவிடுவாரா? நாங்கள் சும்மா விடுவோமா? முத்தரசன் ஆவேசம்
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தரவுகள் இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், இந்த விவகாரத்தில் எந்தத் தொடர்பும் இல்லாத போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரோ, வன்னியர்களுக்கு 10.50%க்கும் கூடுதலாக பிரதிநிதித்துவம் இருப்பதாகக் கூறுகிறார். எந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில் இதை அவர் கூறுகிறார்? அது குறித்த அனைத்து புள்ளிவிவரங்களையும் அரசு வெளியிடுமா?
வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக நான் பல்முறை சந்தித்த போது சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து எதையும் கூறாத முதலமைச்சர், இப்போது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தேவை என்று கூறுகிறார்? என்றால் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது. அவர்கள் தொடர்ந்து மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்க வேண்டும்; அவர்களை ஏமாற்றி நாம் வாக்குகளை வாங்கி பிழைக்க வேண்டும் என்று திமுக அரசு கருதுவதாகத் தான் பொருள் ஆகும். இது வன்னியர்களுக்கு எதிரான மிகப்பெரிய சூழ்ச்சி ஆகும். இந்த சதிவலையை அறுத்தெரிந்து சமூக நீதியை பா.ம.க. விரைவில் நிலை நாட்டும்.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நானே நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்; எட்டு முறை அவருக்கு கடிதம் எழுதினேன். மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையிலான குழுவினர் 3 முறை முதலமைச்சரை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தினர். பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் பாலு ஆகியோர் அடங்கிய குழுவினர் 50 முறைக்கும் கூடுதலாக அமைச்சர்களையும், அதிகாரிகளையும் சந்தித்து வன்னியர் இட ஒதுக்கீட்டை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போதெல்லாம் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஒரு வார்த்தைகூட மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறவில்லை. ஆனால், இப்போது திடீரென சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசுவதன் நோக்கம் வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்கக்கூடாது என்ற எண்ணத்தைத் தவிர வேறு என்ன?
வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்காக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு முதலில் மூன்று மாதங்கள் மட்டுமே காலக்கெடு வழங்கப்பட்டது. அதன்பின் அந்தக் காலக்கெடு 18 மாதங்கள் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஆணையத்திடமிருந்து இன்னும் இடைக்கால அறிக்கையைக் கூட அரசால் பெற முடியவில்லை. ஆணையத்திற்கு தேவையான தரவுகளை தமிழக அரசு இன்னும் வழங்கவில்லை. ஆணையத்தின் பணிகள் இந்த நிலையில் முடங்கிக் கிடக்கும் நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப் படாமல் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்ற ஞானம் முதல்வருக்கு எங்கிருந்து வந்தது?
மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து மத்திய அரசு நடத்தினால் அது முழுமையானதாக இருக்காது. அதில் தலைகளின் எண்ணிக்கை மட்டும் தான் இருக்கும். பிகாரில் நடத்தப்பட்டது போன்று, மாநில அரசே நடத்தினால் தான் அதில் ஒவ்வொரு சமுதாய மக்களின் சமூக பின்தங்கிய நிலைமை குறித்த விவரங்கள் இடம்பெற்று இருக்கும். அதை தமிழக அரசே நடத்தாமல், மத்திய அரசு நடத்தினால், அதன்பின் நாங்கள் இட ஒதுக்கீடு வழங்குவோம் என்று கூறுவது போகாத ஊருக்கு வழிகாட்டும் செயலாகும். கலைஞர் மட்டும் இப்போது முதலமைச்சராக இருந்திருந்தால், இந்நேரம் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கியிருப்பார். ஆனால், இப்போது முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற சமூகநீதி பார்வை இல்லை.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி ஒரு போதும் எதிரி அல்ல. இன்னும் கேட்டால் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை 45 ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் ஒரே தலைவர் நான் தான். கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான வாய்ப்பு 3 முறை ஏற்பட்ட போது, அதை சீர்குலைத்தது திமுக தான். இப்போதும் கூட தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு யோசனை கூறியதே நான் தான். சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து இதுவரை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றாத தமிழக அரசுக்கு இப்போது தான் திடீரென அக்கறை வந்திருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை திமுகவை விட ஆயிரம் மடங்கு வலிமையாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதைக் காரணம் காட்டி வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை மறுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதை வன்னியர் சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது.
தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறியதன் மூலம் வன்னியர்களுக்கு திமுக ஆட்சியில் இடஒதுக்கீடு கிடைக்காது என்பது உறுதியாகி விட்டது. இது தான் திமுகவின் சமூக அநீதி கோரமுகம் ஆகும். பல நேரங்களில் அதை வெளிப்படுத்திய திமுக, இப்போது வன்னியர்களுக்கு எதிராக மீண்டும் வெளிப்படுத்தி உள்ளது. இதை வன்னிய மக்கள் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். வன்னியர்களுக்கு சமூக அநீதி இழைத்து வரும் திமுகவுக்கு, அச்சமுதாய மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவர் என்பது உறுதி.
வன்னியர் இட ஒதுக்கீடு என்பது சாதி சார்ந்த சிக்கல் அல்ல. அது சமூக நீதி சார்ந்த ஒன்று. தமிழகத்தின் பெரும்பான்மை சமூகமான வன்னியர்கள் முன்னேறாமல் தமிழ்நாடு முன்னேறாது. இதை உணர்ந்து வன்னிய மக்களுக்கு உடனடியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதை செய்ய மறுத்தால் கடந்த காலங்களில் நடத்தியதை விட மிகக் கடுமையான போராட்டங்களை நடத்தி, வன்னியர்களுக்கான சமூகநீதியை பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் இணைந்து வென்றெடுக்கும். இது உறுதி” என்று குறிப்பிட்டுள்ளார்.