மதுவுக்கு எதிராக கருப்பு சட்டை அணிந்து போராடிய ஸ்டாலின் கள்ளக்குறிச்சி வராதது ஏன்? பிரேமலதா கேள்வி
கள்ளச்சாராய மரணத்தில் திமுக அரசுக்கு எதிராக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளச்சாராய் உயிரிழப்பை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கள்ளக்குறிச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவர் பேசுகையில், எதற்கெடுத்தாலும் முன்னே வந்து நிற்கும் திமுக தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின், கள்ளக்குறிச்சி பகுதியில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இதுவரை ஏன் வந்து சந்திக்கவில்லை? தனது மகனை அனுப்பி 10 லட்ச ரூபாய் நிவாரணத்தை வழங்கியது ஏன் என கேள்வி எழுப்பினார்.
மேலும் ஒட்டுமொத்த தமிழகத்திலும் மதுவை ஒழிக்க வேண்டும் என முன்பு எதிர்க்கட்சியாக இருந்தபோது தங்களின் இல்லத்தின் வாசல் முன்பே கருப்பு சட்டை அணிந்து நின்ற ஸ்டாலின் தற்போது ஆட்சிக்கு வந்தும் ஏன் அதை செய்யவில்லை? அதேபோல் ஸ்டாலின் தங்கை கனிமொழி தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கினால் விதவைகள் அதிகமாகி உள்ளதாக கூறினார். தற்பொழுது திமுக ஆட்சிக்கு வந்த பின்பு ஏன் டாஸ்மாக் கடைகளை மூடவில்லை?
மனு கொடுத்துவிட்டால் ஆளுநர் ஆட்சியை கலைத்துவிடுவாரா? நாங்கள் சும்மா விடுவோமா? முத்தரசன் ஆவேசம்
பெண்களுக்கு பாதுகாப்பான அரசு என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால் எத்தனை பெண்கள் தற்பொழுது தங்களது கணவரை இழந்து வாடி வருகின்றனர். இதற்கு என்ன பதில் கூறுவார்? அதேபோல் நான்காயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தப்படும் என தெரிவித்தார். இதுவரை தமிழகத்தில் எந்த சாலை சரியாக உள்ளது?
கள்ளக்குறிச்சி விவகாரத்தை சிபிஐக்கு மாற்றி முறையான விசாரணை நடத்த வேண்டும். பணத்தை வைத்து மக்களின் வாயை மூடி விடலாம் என நினைக்கும் இந்த அரசை நம்ப கூடாது. இந்த சம்பவத்திற்கு காரணம் இரண்டு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தான். திமுக அமைச்சர் முத்துசாமி இத்தனை உயிர் இழப்புக்கு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்த கள்ளச்சாராயத்தில் உயிர் இழந்தவர்களுக்கு பணம் வழங்கிய இந்த அரசு உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கும், மீனவர் குடும்பத்திற்கும் பணம் வழங்குகிறதா என கேள்வி எழுப்பினார்.